மன்னார் மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அவுஸ்திரேலிய நிறுவனம் வெளியேறியது

0
Ivory Agency Sri Lanka

தொடரும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கனிய மணல் அகழ்வை நிறுத்திவிட்டு இயந்திரங்களுடன் மன்னார் தீவை விட்டு வெளியேற வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது.

“மக்களின் பாதுகாப்பைக் குலைக்கும் வகையில் நாங்கள் மணல் அள்ளவில்லை. உரிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் மணல் அள்ளுவதை நிறுத்திவிட்டு இயந்திரங்களுடன் தீவை விட்டு வெளியேறுவோம்” என
அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் இலங்கைப் பிரதிநிதி எஸ்.சாலியா தெரிவித்துள்ளார்.

கனிய மணல் ஆராய்ச்சி மற்றும் அகழ்வாராய்ச்சியால் மன்னார் தீவுக்கும், மக்களின் வாழ்விலும் சுற்றுச்சூழலிலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிப்பதற்காக மன்னார் பிரஜைகள் குழுவினால் அண்மையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பிரதிநிதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விரைவில் செல்ல வேண்டும்

சுற்றாடல், மனித உரிமைகள், கடற்றொழில், விவசாயிகள் மற்றும் கிராம அமைப்புக்கள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட மன்னார் பிரஜைகள் குழு தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளது.

தீவில் பெரிய அளவிலான மணல் அகழ்வினால் குறிப்பிடத்தக்க உப்பு நீர் கசிவு மற்றும் குடிநீரில் மாசு ஏற்பட்டது. கடற்றொழில் மற்றும் ஏனைய பிரதான தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தீவுவாசிகளின் வாழ்க்கை சீர்குலைந்து வருவதாக மன்னார் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“பாரம்பரிய மீன்பிடித் தளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் அழிவு, கிணறுகள் மற்றும் நிலத்தடி நீரின் உவர்நீர் தன்மை அதிகரிப்பு, பழங்கால பனைக்காடுகளின் அழிவு, புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விடங்களின் அழிவு மற்றும் சுற்றுலாத் துறையின் இழப்பு போன்ற பல சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் உள்ளன. மன்னாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் சகோ.ஏ.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

மன்னார் தீவைச் சுற்றியுள்ள மணலில் இல்மனைட், ரூட்டைல், கார்னெட் மற்றும் சிர்கான் போன்ற தாதுக்கள் சுமார் 265 மில்லியன் தொன்கள் இருப்பதாக அவுஸ்திரேலிய டைட்டேனியம் சேன்ட் (TSL) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கனிமங்கள் விமானம் மற்றும் வண்ணப்பூச்சு பொருட்கள் உட்பட பல தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

குடிமக்கள் குழு கூட்டத்தில், தனியார் நில உரிமையாளர்களின் அனுமதியின்றி, 4,000ற்கும் மேற்பட்ட மணல் அள்ளும் குழிகளை, 12 மீட்டர் ஆழம் கொண்டதாக, அந்நிறுவனம் தோண்டியுள்ளதாக, அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய டைட்டேனியம் சேன்ட் நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய, மன்னாரில் மணல் அகழ்விற்காக வழங்கப்பட்ட உரிமம் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தால் மே 4, 2021 முதல் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மன்னார் தீவு கனிய மணல் திட்டத்தில் இலங்கை நிறுவனமான Kilsight Exploration தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 63% நிலப்பரப்பு கடல் மட்டத்திற்கு கீழே மூழ்கியுள்ள மன்னார் தீவில் மணல் அகழ்வு நிறுத்தப்படாவிட்டால், சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை சீர்செய்ய முடியாது என எச்சரித்து, மன்னார் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பு, அதனை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வலியுறுத்துமாறு உள்ளூர் மற்றும் சர்வதேச ஆதரவுடன் மனுவொன்று ஆரம்பித்துள்ளது.

https://www.change.org/p/his-excellency-gotabaya-rajapaksa-president-of-the-democratic-socialist-republic-of-sri-lanka-stop-planned-sand-mining-that-threatens-mannar-island-s-fragile-eco-system

மக்களின் உயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் மன்னார் தீவில் மணல் அகழ்வது குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

“டைட்டேனியம் சேன்ட்ஸ் அஸ்திரேலிய நிறுவனம், அவுஸ்திரேலிய வணிகங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய அழிவுகரமான திட்டங்களைத் தொடர வேண்டாம் என அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்” என செனட்டர் ஜேனட் ரைஸ் 12 நவம்பர் 2020 அன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments