மலையக பிள்ளைகளின் கல்வியை இராணுவம் தடுக்கிறது

0
Ivory Agency Sri Lanka

மலையகத் தமிழர்களின் பிள்ளைகளுக்காக அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் ஒரு பகுதியை அரசாங்கம் கைப்பற்றியமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

“கொட்டகலை ரொசிடா தோட்டத்தில் சுமார் 100 ஏக்கரில் பண்ணை இருந்தது. ஆனால் பல வருடங்களாக அது கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்பதே எமது திட்டமாக இருந்தது. பண்ணையை அதன் செயன்முறைப் பயிற்சிக்காக மீள ஆரம்பிக்கவும் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அரசாங்கம் அதில் பத்து ஏக்கரை இராணுவத்திற்கு வழங்கியுள்ளது” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கரைச் சந்தித்த தொழிலாளர் காங்கிரஸ், இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாக குற்றம் சுமத்தி, ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்அண்மையில் வெளியேறியது.

“அரசாங்கத்தில் இருந்து நாங்கள் பிரிந்து செல்வதற்கு தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டமை ஒரு முக்கிய காரணமாகும். இதை கண்டித்து போராட்டம் நடத்தினோம். ஆனால் அரசின் முடிவில் மாற்றம் இல்லை.”

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதான நோக்கம் மக்களைப் பாதுகாப்பதே என அண்மையில் கொட்டகலையில் மலையக ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

“அது தவறான செயல். என்ன கூறினாலும் முறையான விசாரணை இல்லாமல் மக்களை கைது செய்து துன்புறுத்த முடியாது.”

மிரிஹானவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு நன்றி தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாட்டையும் புறக்கணித்து அரசாங்கத்திற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக சுட்டிக்காட்டினார்.

தமிழ் முற்போக்கு முன்னணியினால் தலவாக்கலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனவும் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

“சமைப்பதற்கு எரிவாயு அல்லது எரிபொருளின்றி இன்று மக்கள் அவதிப்படுகின்றனர். பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு எதிராக எப்படியும் மக்கள் வீதியில் இறங்குவார்கள். இதன் பின்னணியில் எந்த கட்சி இருந்தாலும் நாங்கள் ஆதரவளிப்போம்.”

Facebook Comments