46 நாட்களில் கடற்படையின் வலையில் சிக்கிய 179 இலங்கையர்

0
Ivory Agency Sri Lanka

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 179 இலங்கையர்கள் கடந்த ஒன்றரை மாதத்திற்குள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு, கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வட-மத்திய மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் இலங்கை கடற்படை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 42 படகுகள், ஒரு லொரி மற்றும் ஒரு முச்சக்கர வண்டி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 19 முதல் 67 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார், பல்லெகுடா, பூனரின், சுன்னாகம், வன்காலை, நச்சிகுடா, போகஸ்வெவ, வெடிதலதீவு, அரிப்பு, உப்புவேலி, சல்லிசாம்பல்தீவு, கல்பிட்டி, நீர்கொழும்பு, கந்தக்குலிய, குடாவ, புத்தலம், நொரொச்சோலை, வென்னப்புவ, வாத்துவ, திக்வெல்ல, கந்தர, இரனவில, ஜா-எல, அலவ்வ, ஹம்பன்தோட்டை மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் பிற பொருட்களுடன் திருகோணமலை, மன்னார், பேசாலை, சிலாவத்துர, கல்பிட்டி, புத்தலம், ஹம்பாந்தோட்டை, கிலிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களுக்கும், புறக்கோட்டை மற்றும் திக்வெல்ல காவல் நிலையங்களுக்கும் தேசிய மீன்வளர்ப்பு மேம்பாட்டு ஆணையத்தின் மீன்வள ஆய்வாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.

எவ்வாறெனினும், இலங்கை கடலில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கச் சென்ற வெளிநாட்டு மீனவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்படை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்தல், சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்துதல், உரிமம் இல்லாமல் இரவில் மீன்பிடித்தல், சட்டவிரோதமாக சுறா துடுப்புகளை வைத்திருத்தல், சட்டவிரோதமாக மீன்பிடித்தல், சிப்பிகள் மற்றும் கடல் அட்டைகள் வைத்திருத்தல் மற்றும் கடல் ஆமை முட்டைகளை விற்பனைக்கு கொண்டு செல்லல் ஆகிய காரணங்களினால் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதோடு மீன்பிடி பொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆமை முட்டைகள்

உலகில் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றான ஆமைகள் அச்சுறுத்தலுக்குள்ளான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

உலகில் ஏழு வகை கடல் ஆமைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து வகைகள் முட்டையிட இலங்கை கடற்கரைக்கு வருவதாக சூழலியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். (இலங்கையில் காணப்படும் ஐந்து வகையான ஆமைகள் ஒலிவ் ரிட்லி ஆமை, லாகர்ஹெட், பச்சை ஆமை, ஹக்ஸ்பில் ஆமை மற்றும் லெதர்பேக் ஆமை.)

இலங்கை விலங்குகள் மற்றும் தாவர கட்டளைச் சட்டத்தின் மூன்றாம் பந்தியின், பிரிவு 30 இன் படி, ஆமைகள் கொல்லப்படுவது, காயமேற்படுத்துவது, முட்டை சேகரிப்பது, கூடுகளை அழித்தல், ஆமையை வைத்திருத்தல் மற்றும் ஆமையின் பாகத்தை வைத்திருத்தல் ஆகியவை குற்றச்செயல்களாக கருதப்படுகின்றன இத்தகைய செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு.

இதற்கமைய குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு குறையாத அல்லது முப்பதாயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதத்தை விதிக்க முடியும் அல்லது இரண்டு வருடங்களுக்கு குறையாத மற்றும் ஐந்து வருடங்களுக்கு கூடாத சிறைத்தண்டனையை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments