வடக்கு – தெற்கு ஒன்றிணைப்புப் போராட்டத்திற்காக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பும் தென்னிலங்கை இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வடபகுதி இளைஞர்களும் தமது கோரிக்கைகளை கொழும்பு போராட்டத்தில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

“உங்களுடன் இந்தப் போராட்டத்தை தொடர விரும்புகிறோம் என தெற்கில் உள்ள எங்கள் சகோதரர்களிடம் கூறுகிறோம். நாங்கள் உன்னுடன் இருக்கிறோம். ஆனால் எங்களிடம் சில கேள்விகள் காணப்படுகின்றன. அவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற செய்தியை உங்களுக்கு நாம் அறிவிக்கின்றோம்.”

கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சார்பில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

“இனப்படுகொலைக்கு நீதி”, “PTA ஒழிப்பு”, “#GoHomeGota” என்ற கோஷங்களை எழுப்பியவாறு யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.

#GoHomeGota

சில சிங்கள ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ‘GoHomeGota’ போராட்டத்திற்கு தமிழர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை என முறைப்பாடு செய்த நிலையில், காலி முகத்திடலில் பிக்கு ஒருவர் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தமை சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை விட நூறு மடங்குக்கும் அதிகமான துன்பங்களை வடக்கு கிழக்கு மக்கள் அனுபவித்து வருவதாக அவர் தென்பகுதி மக்களுக்கு சுமந்திரன் நினைவூட்டினார். அப்போது தமிழ் மக்கள் சார்பாக பெரும்பான்மையானவர்கள் பேசாதது பிரச்சினையாக இருந்த போதிலும் தற்போது வடக்கிலுள்ள இளைஞர்கள் ராஜபக்சக்களை வெளியேற்றும் போராட்டத்துடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாகவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

“எங்கள் போராட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் மாத்திரமே நாம் முன்னேற முடியும்.”

வடக்கின் கோசங்களை தென்பகுதியில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென தெற்கில் உள்ள இளைஞர்களுக்கு சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

“எங்கள் போராட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற செய்தியை இன்று நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் குழுவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

வடக்கில் 1881 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கொழும்பு போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் சந்தேகத்திற்குரிய அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் தமிழர்களின் பங்களிப்பானது, ஒற்றையாட்சியை வலுப்படுத்த உதவலாம் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

Facebook Comments