இலங்கைக்கான நிதியுதவியை இந்தியா நிறுத்தியுள்ளதாக வெளியான தகவலை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.
இருதரப்பு உதவிகளை வழங்குவதோடு, ஏனைய நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் இந்தியா தலையீடு செய்யுமென கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
“இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு இந்தியா இந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இருதரப்பு உதவியாக வழங்கியுள்ளது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்,” என கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊடகப் பேச்சாளர் எல்டோஸ் மெத்யூ புன்னுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) 29.9 பில்லியன் டொலர்களை பெறுவதற்கு இலங்கையின் கடனை செலுத்தும் திறன் குறித்தும் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது.
“இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு உடனடி உதவிக்காக இந்தியா மற்ற இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளையும் அணுகியுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பணியாளர் மட்ட ஒப்பந்தமொன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் அனுமதி பெறுவதற்கு இலங்கையின் கடன் நிலைத்தன்மையையும் இது பாதிக்கிறது. குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தின் விரைவான மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான பொருளாதார மையங்களில் நீண்டகால முதலீடுகள் மூலம் இலங்கைக்கு எங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் தொடர்ந்து ஆதரவளிப்போம்.”
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் இருதரப்பு அபிவிருத்தித் திட்டங்களின் பெறுமதி 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது. பொருளாதார உதவிக்கு மேலதிகமாக இலங்கையர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் அபிவிருத்திக்காக புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.