கோட்டாபய ஆட்சிக்கு எதிராக நீண்ட நெடிய பாதயாத்திரையை ஏற்பாடு செய்த வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் குழுவொன்று, வெளிநாடுகளில் இருந்து யுத்தம் நடத்துவதற்காக பெறப்பட்ட பாரியளவிலான கடன்களே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக போர் தொடுப்பதற்காக பெறப்பட்ட கடன்களினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியே இன்று அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் ஏற்பாட்டில் பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை 700 கிலோமீற்றர் பயணத்தை நடத்திய, P2P அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
69 இலட்சம் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக பெருமை வெளியிட்ட, சிங்கள ஜனாதிபதிக்கு வாக்களித்த அதே மக்களே இன்று அவர் பதவி விலகக் கோரி வீதியில் இறங்கிப் போராடுவதாக P2P வலியுறுத்துகிறது.
சிங்களத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
“சிங்கள ஆட்சியாளர்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும் எமது உரிமைகளை பறித்து விடுவார்கள். எமது காணிகள் பலவந்தமாக கையகப்படுத்தப்படுகின்றன. அவர்கள் நமது வளங்களை சுரண்டுவது மட்டுமின்றி, நமது பகுதிகளின் மக்கள்தொகையை மாற்றவும் தயங்க மாட்டார்கள்.”
வேலன் சுவாமிகள், சபாரத்தினம் சிவயோகநாதன் மற்றும் கந்தையா ஜெகநாதன் ஆகியோரின் கையொப்பமிடப்பட்ட அறிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டம் மாத்திரமன்றி தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்போதைய நெருக்கடி எங்களுக்கு புதிதல்ல. 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம், எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் இன்றி பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம்.”
தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்திற்காக அரசாங்கம் பெற்ற வெளிநாட்டுக் கடனினால் வரட்சியான பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்காக, இந்திய மத்திய, தமிழக அரசுகள் பொருளாதார நிவாரணம் வழங்கியுள்ளதாக P2P வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இவ்வாறான பொருளாதார நிவாரணங்களை வழங்கும் போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காண இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவை அந்த அமைப்பு கேட்டுக்கொள்கிறது.
“சிங்கள மக்கள் தமது நிர்வாகத்தை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை தமிழ் மக்கள் மிகக் கவனமாகப் பார்க்க வேண்டும். இன்று இருக்கும் பின்னணிக்காக காரணங்களைத் மனிதர்களை மாத்திரம் மாற்றுவதை ஏற்க முடியாது.“
“தமிழ் மக்களை நாளுக்கு நாள் அழிவை நோக்கித் தள்ளுவதை விட்டுவிட்டு, தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நியாயமான போராட்டத்தை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”