கறுப்பு ஜுலை நினைவுகூறல் AT | MOST | FEAR இணையத்தில் வெளியானது

0
Ivory Agency Sri Lanka

37 வருடங்களுக்கு முன்னர் 3,000ற்கும் மேற்பட்ட தமிழர்கள் அரச அனுசரணையுடன் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலை நினைவாக இணையவழி கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை மையமாகக் கொண்டு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளரும், புகழ்பெற்ற சித்திரக் கலைஞருமான பேராசிரியர் சந்திரகுப்த தேனுவரவின் ஏற்பாட்டில், கொழும்பு சஸ்கியா கேலரியில் இடம்பெறும், “ATMOSPHERE | AT | MOST | FEAR” கண்காட்சியை இன்று முதல் உலகின் எப்பாகத்தில் இருந்தும் இலவசமாக இணையம் மூலம் பார்வையிட முடியும்.

“ATMOSPHERE | AT | MOST | FEAR” எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி ஜூலை 23 முதல் ஓகஸ்ட் 16 வரை இணையத்தில் பார்வையிட முடியும். கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலால், மக்கள் கூடும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதை விட இணையத்தின் ஊடாக பார்வையாளர்களை இணைத்துக்கொள்வது ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாகும்.

கீழேயுள்ள இணைப்பின் ஊடாக கண்காட்சியில் இணைந்துகொள்ள முடியும்.

https://www.saskiafernandogallery.com/viewing-room/

2014இல் சமூகத்தில் நிலவிய இராணுவமயமாக்கல் நிலைமை மீண்டும் நாட்டில் அதிகரித்து வருவதாக கூறியுள்ள பேராசிரியர், கறுப்பு ஜூலையை நினைவுகூரும் கண்காட்சியில் உள்ள கலைப்படைப்புகளில் இந்த விடயத்தை அவதானிக்க முடியுமெனத் தெரிவித்துள்ளார்.

1983 ஜூலை 23 ஆரம்பமான இலங்கையின் கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் பெரிதாக வெளிப்படுத்தப்படாத இனப்படுகொலை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டதோடு, பல்லாயிரக்கணக்கான வீடுகள் உட்பட சொத்துக்கள் தீக்கிரையாகின.

விடுதலைப் புலிகளால் 13 இலங்கை படையினர் கொல்லப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட தமிழ் எதிர்ப்பு கலவரங்கள் யுத்தத்திற்கு காரணமாக அமைந்ததாக பரவலாக நம்பப்படுகிறது.

எவ்வாறாயினும், தமிழீழ விடுதலைப் புலிககளின் தாக்குதலுக்கு முன்னதாகவே வடக்கில் அரச பாதுகாப்புப் படையினர் நடத்திய அடக்குமுறை தாக்குதல்களே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு வழிவகுத்தது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய தகவல்களும் காணப்படுகின்றன.

இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் மீள நிகழ்வதை தடுக்கும் நோக்கிலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஒவ்வொரு வருடமும் ஜூலை 23ஆம் திகதி இதுபோன்ற கலை கண்காட்சியை ஏற்பாடு செய்து வருகின்றார்.

எனினும், இணையவழி கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதன்முறை என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் 83ஆம் ஆண்டு தமிழர்கள் படுகொலைக்கு காரணமான எவரையும் எந்த அரசாங்கமும் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments