“நிலைமையைக் கட்டுப்படுத்தல்” கொழும்பு உயர் பாதுகாப்பு வலயங்கள் மனித உரிமைகளுக்கு எதிரானவை (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

மக்களின் அடிப்படை உரிமைகளை கடுமையாக மீறுவதாக அரசாங்கத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினால் கண்டிக்கப்பட்ட நிலையில், கொழும்பு மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படுவதன் நோக்கம் அரச விரோதிகளை ஒடுக்குவதே என நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவரின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

“அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்படலாம் என்ற கருத்து எந்தவித நியாயமும் இல்லாத மாயை” என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச இரகசிய சட்டத்தின் இரண்டாவது பிரிவின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு மாவட்டத்தில் உள்ள எட்டு வலயங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக செப்டம்பர் 23ஆம் திகதி பிரகடனப்படுத்தியிருந்தார்.

மக்களின் அடிப்படை மனித உரிமைகளை கடுமையாக மீறும் செயலாக இதனை முன்வைத்து, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்து, சர்வதேச மற்றும் உள்நாட்டு விதிமுறைகளுக்கு அமைவாக நாட்டின் சட்டங்களை பிரயோகிக்குமாறு கோரியுள்ளது.

கடுமையான பாதுகாப்பு வலயங்கள் இலங்கைக்கு அறிமுகம் செய்யப்படுவது ஒன்றும் புதிய விடயம் அல்ல எனக் கூறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அதனை “சூழ்நிலைகளை” கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் முறை எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு பெரிய பிரதேசம் யுத்தத்தின் பின்னர் இன்று வரை உயர் பாதுகாப்பு வலயங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.

“இந்த கடுமையாக பாதுகாக்கப்பட்ட வலயங்கள் இன்று இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை அல்ல. இவை எந்த வடிவத்திலும், முறைமையிலும் சில சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்த நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் விடயங்களே” செப்டெம்பர் 26 அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

“எந்த வடிவிலும் வரும் சூழ்நிலைகள்” என்பதை முன்னாள் இராணுவ அதிகாரி விளக்காமல், நாட்டில் ‘நிலையான சூழ்நிலை’ உருவாகி வரும் நிலையில், போராட்டங்களை நடத்தி ‘மக்களை துன்புறுத்தினால்’ பொலிஸ் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என வலியுறுத்தினார்.

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தை கையகப்படுத்தியதால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் அந்த இடங்களைப் பாதுகாக்க வேண்டுமென, ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாடு தொடர்பில் அவதானம்

பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கையின் தலைநகருக்கு வரும் வெளிநாட்டவர்களின் கண்களை மகிழ்விப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு தூதுக்குழுக்கள் கொழும்புக்கு வந்தவுடன் ‘மிகப் பெரிய கொழும்பு நகரில் அராஜக மற்றும் குழப்பமான சூழ்நிலையை’ தடுப்பதற்காக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ” ஒரு சில மிகச் சிறிய இடங்கள்” உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜெனரல் குணரத்ன கூறுகின்றார்.

“நாட்டிற்கு குழுக்கள் வரும்போது, வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது, ஜனாதிபதி அடிக்கடி நாடு, நாட்டின் கொள்கைகள் குறித்து வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடுகிறார். நாட்டின் பொருளாதாரம் பற்றி, நாட்டின் பாதுகாப்பு குறித்து தூதுக்குழுக்கள் மற்றும் தூதர்கள் கலந்துரையாடும் இடம் ஜனாதிபதி மாளிகை.

எனவே அவர்களால் அங்கு வரமுடியாமல் போனால், கொழும்புக்கு வரும்போது மிகவும் அராஜகமான, குழப்பமான சூழலைக் காணும் பட்சத்தில், எமது நாட்டில் சில முன்னேற்றங்களை அடைவதற்கு அவர்கள் சில ஆதரவை வழங்குவது பெரும் தடையாக அமையும்.”

Facebook Comments