ராஜகுமாரி மரணம் குறித்த விசாரணை “அரசின் ஒத்துழைப்புடன் மூடிமறைக்கப்படுவதாக“ குற்றச்சாட்டு

0
Ivory Agency Sri Lanka

கொலை என சந்தேகிக்கப்படும், பொலிஸ் காவலில் இருந்த நிலையில் உயிரிழந்த மலையக தமிழ் வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளை மூடிமறைப்பதற்கு அரசியல்வாதிகள் உடந்தையாக இருப்பதாக இடதுசாரி தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“அரசியல்வாதிகளின் ஆதரவுடன் பொலிஸார் இந்த விசாரணைகளை முடக்கியுள்ளது.”

ஒரு மாதத்திற்கு முன்னர் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாயான ஆர். ராஜ்குமாரி கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர், கொலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவதாக குற்றம் சுமத்தினார்.

ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, பதுளை தெமோதரயில் இருந்து கொழும்பிற்கு பணிப்பெண்ணாக வந்து உயிரிழந்த 41 வயது ராஜ்குமாரிக்கு நீதி கோரி, ஜூன் 12 திங்கட்கிழமை கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் உள்ள பழைய நகர மண்டபத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட அடையாளப் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.

வடக்கு, தெற்கு சகோதரத்துவம் மற்றும் தேயிலை தொழிலாளர் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையக மக்களை காக்கும் இயக்கத்தின் ஆலோசகர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேலும் பங்கேற்றிருந்தார்.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள வசதிபடைத்த பெண்கள் அப்பாவி தோட்டப் யுவதிகளை வேலைக்கு என அழைத்துச் சென்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களை கொலை செய்யும் சூழ்நிலையில், அரேபிய சட்டம் இந்த நாட்டில் செயற்படுகிறதா? என கேள்வி எழுப்பிய இடதுசாரி தலைவர், படுகொலை செய்யப்பட்ட பெருந்தோட்டப் பெண்ணுக்கு நீதியை நிலைநாட்டுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதோடு, கொலையாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும் வலியுறுத்தினார்.

“குறிப்பாக பெண் தோட்டத் தொழிலாளர்கள் கொழும்பு நகரில் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். எனவே பொலிஸாரும் அரசியல் உயரதிகாரிகளும் இது தொடர்பில் மௌனம் காக்கின்றனர்.” என சிறிதுங்க ஜயசூரிய மேலும் குற்றம் சுமத்தினார்.

உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாயான இவர், கொழும்பு, மோதரையில் பிறந்த பிரபல வர்த்தகரும், தொலைக்காட்சி தயாரிப்பாளருமான சுதர்மா டி சொய்சா என்ற சுதர்மா நெத்திகுமாரவின் ராஜகிரியில் உள்ள வீட்டில் சுமார் ஒரு வருட காலமாக வேலை செய்து வந்தார்.

தங்க மோதிரத்தை ராஜகுமாரி திருடிச் சென்றதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸ் காவலில் இருந்த நிலையில் உயிரிழந்த அவரது மரணத்தை மறைக்க இலஞ்சம் கொடுத்ததாக பொலிஸார் மீதும் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

பொலிஸார் பணபலத்திற்கும் அரசியல் பலத்திற்கும் அடிபணிந்து தேசியவாத மனப்பான்மையுடன் செயற்பட்டமையே மரணத்திற்கு காரணம் எனவும் சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்திருந்தது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் ராஜகிரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நான்கு பேர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட மூவர் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Facebook Comments