அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி போராடி வரும் தென்னிலங்கை மனித உரிமை ஆர்வலர் ஒருவர் மாநகர சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அண்மையில் கொழும்பு மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட புதிய சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சுந்தரம் மகேந்திரன், கட்சியுடன் இணைந்த காணாமல் போனோர் விசாரணைக் குழுவின் அழைப்பாளராகவும் செயற்படுகின்றார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பேராசிரியர் விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான புதிய சமசமாஜக் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கீழ் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்டதோடு ஒரு ஆசனத்தை வென்றது.
புதிய சமசமாஜக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானம் மற்றும் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் அண்மையில் கொழும்பு மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினராக சுந்தரம் மகேந்திரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய சமசமாஜக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நாடு முழுவதும் 18 ஆசனங்களைக் கைப்பற்றியது.