வடக்கில் காட்சிப்படுத்தப்பட்ட போது பொலிஸாரால் கேள்வி எழுப்பப்பட்ட மலர் ஒன்று, மிகப் பெரிய நிறுவனத்தால், நாடு முழுவதும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடையின்றி பயன்படுத்தப்படுவது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
நாட்டின் முதல்தர பாதணிகளை விளம்பரப்படுத்தும் வகையில் தெற்கில் உள்ள நிறுவனம் ஒன்று செருப்புகளில் தமிழ் தேசிய மலரான கார்த்திகை மலரின் உருவத்தை பொறித்துள்ளமையால் இலங்கையில் தமிழர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
செருப்பு விற்பனை நிறுத்தப்படாவிட்டால் அவற்றை தமிழர்கள் புறக்கணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கார்த்திகை பூக்கள் பொறிக்கப்பட்ட செருப்புகளை சந்தையில் இருந்து உடனடியாக மீளப் பெறுமாறு காலணி தயாரிக்கும் நிறுவனத்திடம் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“ஈழத் தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட கீழ்வரும் வகையிலான பாதணிகளை, உற்பத்தி நிறுவனம் மீளப்பெற வேண்டுமென விநயமாக வேண்டுகின்றோம்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தினுடைய உற்பத்திகளை புறக்கணிக்குமாறும் அவர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தினுடைய உற்பத்திப் பொருட்களையும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்குமாறு எம் உறவுகளைக் கோருகின்றோம்!”
வடமாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் நேற்று (மே 28) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி, காலணியில் கார்த்திகை பூ பொறிக்கப்பட்டமை தமிழ் மக்களை மிதிக்கும் வகையிலான செயற்பாடு என விமர்சித்துள்ளார்.
“தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு புனிதமான பூவாக போற்றுகின்ற இந்த பூவை, காலில் போட்டு மிதிக்கின்றோம் என அவர்கள் சொல்லத் தக்க வகையில் அவர்கள் கால் செருப்பில் பயன்படுத்தியிருக்கின்றார்கள். ”
தமிழர்கள் அதிகம் வாழும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள செருப்பு கடை ஒன்றில் கார்த்திகை மலரின் உருவத்தை பொறித்து வடிவமைக்கப்பட்ட காலணி கண்டுபிடிக்கப்பட்டதாக பல தமிழ் செய்தி இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த காலணிகள் டி சம்சன் அன்ட் சன்ஸ் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத் தயாரிப்பு ஆகும். இது DSI என பரவலாக அறியப்பட்ட ஒரு வர்த்தக நாமம். இது அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு காலணி தயாரிப்புகளை விற்பனை செய்யும் நாட்டின் மிகப்பெரிய காலணி வர்த்தக சங்கிலியாகும்.
ஒரு தேசத்தை அவமதிக்கும் வகையில் கார்த்திகை மலரை பகிரங்கமாக பயன்படுத்த தென்னிலங்கை நிறுவனத்திற்கு எந்த தடையும் இல்லை என்றாலும், அதே பூவை மரியாதையுடன் பயன்படுத்தும்போது
பாதுகாப்புப் படையினர் அதற்கு எதிராகச் செயற்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிக்காக மாணவர்கள் இல்லங்களை வடிவமைக்கும் போது, யுத்த தாங்கி மற்றும் கார்த்திகை பூ வடிவங்களை பயன்படுத்தி அலங்காரங்களை மேற்கொண்டமையைால் அவர்கள் இராணுவம் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தெல்லிப்பளை பொலிஸார் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பொலிஸுக்கு வரவழைத்து அந்த படைப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தனர்.
போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவு கூர்ந்து கார்த்திகை மலரை அலங்கரித்த பல சந்தர்ப்பங்களில் அந்த அலங்காரத்தை பொலிஸார் அழித்துள்ளதுடன் கார்த்திகை மலரை பேஸ்புக்கில் பகிர்ந்த சிலர் பொலிஸாருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கார்த்திகை பூவை பயன்படுத்தும் தமிழ் மாணவர்களை பொலிஸார் ஊடாக அடக்கும் பேரினவாத அரசாங்கம், கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட கால் செருப்புகளை அனுமதிக்கும் அந்த மனநிலையை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென வடமாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“வடக்கில் அவர்கள் கார்த்திகை பூவை, மாணவர்கள் பயன்படுத்தினால், இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இல்ல அலங்காரங்களுக்கு பயன்படுத்தினால் அதனை இரும்புக் கரம் கொண்டு பொலிஸாரின் கரத்தால் அடக்கும் அரசாங்கம் தென்னிலங்கையில் காழுக்கு கீழே மிதிபடுகின்ற அளவுக்கு இந்த கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட கால் செருப்புகளை அனுமதிக்கும் என்று சொன்னால் இந்த பேரினவாத அரசாங்கத்தின் மனநிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். டிஎஸ்ஐ நிறுவனம் கால் செருப்பை விற்பனையில் இருந்து மீளப்பெற்று இதுத் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கும் வரையில் டிஎஸ்ஐ நிறுவனத்தின் உற்பத்திகளை புறக்கணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.”