பல வருடங்களாக பால் பண்ணையாளர்கள் மாடுகளுக்கு உணவளித்து வரும் புல்வெளிகளை சிங்கள விவசாயிகள் குழுவொன்று வலுக்கட்டாயமாக சுவீகரித்து பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவதால் தாம் நாளுக்கு நாள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கிழக்கு மாகாண தமிழ் பால் பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசாங்கத்தினால் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தில் நான்கில் ஒரு பகுதியை சிங்கள விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதால் அடுத்த சில மாதங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, தம்பலகாமம் மற்றும் முள்ளிப்பொத்தானை ஆகிய கிராமங்களில் உள்ள பாற்பண்ணையாளர்களுக்கு மாடுகளை மேய்ப்பதற்காக கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு அருகில் 2,000 ஏக்கர் காணியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான பால் பண்ணையாளர்கள் தமிழர்கள், ஒரு சில முஸ்லிம் மற்றும் சிங்கள பால் பண்ணையாளர்களும் உள்ளனர்.
ஆனால் தற்போது அதனை அண்மித்த கிராமங்களில் வசிக்கும் சிங்கள மக்கள் சுமார் 500 ஏக்கர் காணியை அரசாங்கத்தின் அனுமதியோ அல்லது அரசாங்கத்திற்கு தெரியாமலோ விவசாய பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தி வருவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தாம் எதிர்நோக்கும் அசௌகரியம் தொடர்பில் முறைப்பாடு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பொலிஸார், தமது மாடுகள் விவசாயிகளின் விவசாய நிலத்தை நாசப்படுத்தினால் நட்டஈட்டை வழங்குமாறு தம்மை அச்சுறுத்துவதாக தமிழ் பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கள விவசாயிகள் தமது மாடுகளைத் திருடி இறைச்சிக்காக வெட்டுவதாகவும் குற்றம் சுமத்தும் தமிழ் பால் பண்ணையாளர்கள், புல்வெளிகளை ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் சிங்கள விவசாயிகளால் தாம் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அரச அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.