சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தளபதியிடம் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பாதுகாப்பு

0
Ivory Agency Sri Lanka

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணியின்போது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட இராணுவப் படையணியின் தளபதி ஒருவரிடம் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பாதுகாப்புக் கொள்கையை தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தலைமையில், மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற ஆயுதப்படையினர் கூட்டமைப்பின் ஆரம்ப மாநாட்டிற்கு முன்னதாக, 2005ஆம் ஆண்டு ஹெய்டியில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவப் படையணியின் பிரதித் கட்டளைத் தளபதியினால் கட்சியின் தேசிய பாதுகாப்புக் கொள்கை வெளியிடப்பட்டது.

நவம்பர் 3, 2005இல் ஹெய்டிக்கு அனுப்பப்பட்ட மூன்றாவது இலங்கைப் படையணியின் பிரதி கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர செயற்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விசாரணை சேவை அலுவலகம் (OIOS) நடத்திய விசாரணையின் ஊடாக வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய, 2004 – 2007 காலப்பகுதியில் இலங்கை படையினரால் சிறுவர்கள் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்தப் படையணியின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பிரதி கட்டளை அதிகாரியாகப் பொறுப்பு வகித்த மேஜர் அருண ஜயசேகர தொடர்பில் இலங்கை இராணுவமோ அல்லது அரசாங்கமோ முறையான விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படவில்லை. மாறாக அவருக்கு பல்வேறு பதவிகள், பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் மேஜர் ஜெனரலாக அவர் பதவி உயர்வு பெற்றார். மேலும் அவர் அதே அரசாங்கத்தால் 2018இல் கிழக்கு கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக அருண ஜயசேகர, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்மொழியப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸின் அரசியல் எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.

“ஹெய்டியில் அவரது பங்கு தொடர்பில் நம்பகத்தன்மையுடன் விசாரிக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் வரை அவன் எந்த பதவியும் வகிக்கத் தகுதியற்றவர்” என சர்வதேச நீதி மற்றும் உண்மைத் திட்டம் (ITJP) மற்றும் இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) ஆகிய அமைப்புகள் 2019இல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இலங்கை இராணுவத்தின் ஆட்குறைப்பு, பொறுப்புக்கூறல் அல்லது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் அனுபவிக்கும் தண்டனையின்மைக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில், முன்னாள் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி அருண ஜயசேகரவினால், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு கொள்கை பிரகடனத்தில் எதனையும் குறிப்பிடவில்லை.

Facebook Comments