முதுமை, வறுமை, கொவிட் தொற்று அச்சுறுத்தல் உள்ளிட்ட பல தடைகளையும் மீறி வீதியில் இறங்கிய தமிழ்த் தாய்மார்கள், பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அல்லது அவர்களால் கடத்தப்பட்ட பின்னர் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தும் போராட்டம் ஏழாவது ஆண்டை எட்டியுள்ளது.
இலங்கையில் மிக நீண்ட தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வரும் போரில் பாதிக்கப்பட்டவர்களில் 160ற்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் தந்தையர் பதில் தெரியாமலே உயிரிழந்துள்ளனர்.
அரசாங்கம் முன்வைத்துள்ள இரண்டு இலட்சம் ரூபா நட்டஈட்டை கடுமையாக நிராகரித்துள்ள தாய் தந்தையர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களில் கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொருவருக்காகவும் 25 இலட்சம் ரூபாவை வழங்கத் தயார் எனத் தெரிவித்துள்ளனர்.
“ஆறு வருடங்களாக எங்களுக்கு விடை கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் 12 ஆணைக்குழுக்களுக்குச் சென்றும் இன்று வரை பதில் கிடைக்கவில்லை” என வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கலாரஞ்சனி தெரிவித்தார்.
ஏழாவது வருடமாக முன்னெடுக்கும் போராட்டத்தின் தொடர்ச்சியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான தமிழ் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து டிப்போ சந்தி வரை பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.