இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை தேடும் உறவினர்களுக்கு வெற்றி!

0
Ivory Agency Sri Lanka

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலி அமைப்பின் போராளிகள் உள்ளிட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கு இலங்கை இராணுவமே பொறுப்புக்கூற வேண்டும் என நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் எவ்விதத் தகவலும் கிடைக்காத நிலையில், அவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்கள் 2023 பெப்ரவரி 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களை மார்ச் மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறும் இராணுவத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருமாறு மனுக்களை தாக்கல் செய்த மனைவிமார் வழங்கிய சாட்சியங்கள் நம்பகமானவை என நீதிபதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட போரில் அரச படையினரிடம் சரணடைந்த பின்னர் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காத பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மன்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்) மற்றும் ருத்ரமூர்த்தி கிருஷ்ணகுமார் (கொலம்பஸ்) ஆகியோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

காணாமல் போயுள்ள மூவரும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் அல்லது இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள விடயம் ஒரு “வெற்றி” என, வவுனியா, திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களிலும் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவராக செயற்பட்ட சின்னத்துரை சசிதரனின் (எழிலன்) மனைவி அனந்தி குறிப்பிட்டுள்ளார்.

“கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த வழக்கை தாக்கல் செய்தோம். இது எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையைத் தருகிறது. அவர்களை இலங்கை அரசின் இராணுவத்திடம் ஒப்படைத்தோம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.” என அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாளின் தனித்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது என, காணாமல் போன எழிலனைக் கண்டுபிடிப்பதற்கான பதினைந்து வருடங்களாக நீடிக்கும் முடிவில்லாத போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆவணப்படத்தை உருவாக்கிய கண்ணன் அருணாசலம் கூறியுள்ளார்.

இந்த வெற்றி இலங்கை இராணுவத்தினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட கணவன், மகள் மற்றும் மகன்களின் அனைத்து தாய்மார்களுக்கும் மனைவிகளுக்கும் உரியது என, விசாரணையின் பின்னர் வவுனியாவில் அனந்தி தன்னிடம் கூறியதாக கண்ணன் சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஒரு திருப்புமுனை

முல்லைத்தீவு இராணுவ முகாமில் 13 வருடங்களுக்கு முன்னர் சரணடைந்து கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் குறைந்தபட்சம் ஒருவரேனும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக 2022 டிசம்பர் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கிய வவுனியா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இராணுவத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைத்து அன்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்தார். ஆயுதம் எதுவுமின்றி இராணுவத்திடம் சரணடைந்த செல்லையா விஸ்வநாதனை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இராணுவ தளபதி மற்றும் 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2018ஆம் ஆண்டு 58ஆவது படைப்பிரிவு மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாமின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன, இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு இராணுவ முகாமில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் பட்டியல் இராணுவத்திடம் உள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார். ஆனால் அவர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

பின்னர் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் வழங்கிய ஆவணம் மாத்திரமே தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார்

யாரும் பதிவு செய்யவில்லை

2022 நவம்பரில், வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்த எவரும் பதிவு செய்யப்படவில்லை என்பதை இலங்கை இராணுவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருந்தது.

தமிழ்மிரர் ஊடகவியலாளர் பி. நிரோஷ்குமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கோரிய தகவல் மறுப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீடு, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவால் 2022 நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

போரின் இறுதி நாட்களில், யுத்த வலயத்திலிருந்து வெளியேறிய இலட்சக்கணக்கான மக்களில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டனர். வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் புள்ளிவிபரங்களுக்கு அமைய அவர்களில் குழந்தைகளும் பெண்களும் இருந்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு, இராணுவத்திடம் சரணடைந்தவர்களில் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களா என்பது தமக்குத் தெரியாது எனக் கூறி, தமிழ் ஊடகவியலாளரின் தகவல் கோரிக்கையை இராணுவம் நிராகரித்திருந்தது.

“போர் பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்கள் விடுதலைப் புலிகளா அல்லது பொதுமக்களா என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பொறுப்பேற்ற போது பதிவு செய்யவில்லை. “எங்களிடம் வந்தவர்களை பேரூந்துகளில் அழைத்துச் சென்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கீழ் முகாம்களில் தங்க வைத்தோம். அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகம் அவர்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது” என இராணுவத்தினர் சாட்சியமளித்தனர்.

இராணுவம் அளிக்கும் தகவல்கள், அரசு அவ்வப்போது தெரிவித்து வரும் அறிக்கைகளுக்கு முரணாக உள்ளது.

வெள்ளை கொடி விவகாரம்

வெள்ளைக் கொடியுடன் வந்து இராணுவத்திடம் சரணடைந்த ஒரு குழுவை அப்போது 58ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பொறுப்பேற்றதாக 2013ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் வெளிப்படுத்தியிருந்தன.

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் பாலசிங்கம் நடேசன், சமாதானப் பணியகத்தின் தலைவர் சிவரத்தினம் புலிதேவன் ஆகியோர் பொறுப்பேற்றவர்களில் அடங்குவதாக உள்ளுர் மற்றும் சர்வதேச ஆணைக்குழுக்கள் தெரிவித்திருந்தன.

எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி 58ஆவது படைப்பிரிவினரால் நடேசனும் புலிதேவனும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு வெள்ளைக்கொடியுடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைய வந்த நடேசன் மற்றும் புலிதேவன் கொலையை போர்க்குற்றம் என அறிவித்த ஐக்கிய நாடுகள் சபையும் பரணகம ஜனாதிபதி ஆணைக்குழுவும் சுதந்திரமான விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.

வன்னி இராணுவத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களால் நியூயோர்க்கில் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் துணை நிரந்தரப் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டமையால் அவருக்கு காணப்பட்ட இராஜதந்திர விலக்கு பாதுகாப்பு உத்தரவாதம் காரணமாகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது.

Facebook Comments