ராஜபக்ச அரசாங்கத்தின் அனுசரணையுடன் காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர் மீது மொட்டு கட்சியின் பிரதிநிதி நடத்திய தாக்குதலானது, போராட்டத்திற்கு பங்களிப்பு வழங்கிய அனைவரையும் இலக்கு வைத்து நடத்தப்படும் தொடர் தாக்குதல்களின் ஆரம்பம் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கிறார்.
“பியத் நிகேஷல மீது நடத்தப்பட்டது முதலாவது தாக்குதல். இந்த முழுப் போராட்டத்திற்கும் நடத்தப்படும் தாக்குதல்களின் முதல் அடியே இது.”
கடந்த 10ஆம் திகதி மொட்டு கட்சி உறுப்பினரும், கடுவெல முன்னாள் பிரதி மேயருமான சந்திக அபேரத்ன பியத் நிகேஷல மீது நடத்திய மிலேச்சத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கும்பல் தாக்குதலுக்கும், கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர்.”
போராட்டத்தில் ஈடுபட்ட அமைதிப் போராளிகளின் உயிரைப் பாதுகாப்பதற்காகப் செயற்படுமாறு சபாநாயகர் மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மேலும் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நபர்களின் பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“சமூக ஊடகங்களில் பரவுகிறது. பெயர்ப் பட்டியல் ஒன்று உள்ளதாம். அவர்களுக்காகக் காத்திருக்கின்றார்களாம். அடுத்ததாக தாக்குதலுக்கு உள்ளாகும் நபர் நீங்களாம்”
தாக்குதலுக்கு உள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் பியத் நிகேஷலவும் மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரு தரப்பினரும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியத் நிகேஷல மற்றும் கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் சிகிச்சைப் பெறும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் முல்லேரிய ஆரம்ப வைத்தியசாலைக்கு நீதவான் நேரில் சென்று பரிசோதித்ததன் பின்னர் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.