தனியார் துறைக்கும் ஐயாயிரம் வழங்குவது குறித்து ‘பேச்சுவார்த்தை’

0
Ivory Agency Sri Lanka

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள 5,000 ரூபா கொடுப்பனவை ஜனவரி மாதம் முதல் தனியாருக்கு வழங்குவது தொடர்பில் இந்த வாரம் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படும் என தொழில் அமைச்சர் கூறுகிறார்.

அரச ஊழியர்களைப் போலவே தனியார் துறை ஊழியர்களாலும் வாழ்க்கைச் சுமை உணரப்படுவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் இம்மாதம் 7, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் தொழில் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் ஆடைத் துறை, தோட்டத் துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்கள் உட்பட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் முதலாளிகளை அழைத்து, 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவது குறித்து சுமுகமான கலந்துரையாடல் நடத்தப்படும் என தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக, தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் முதல் ஒவ்வொரு அரச உத்தியோகத்தருக்கும் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்வினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அண்மையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, தனியார் துறையினருக்கும் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தனியார் துறை முதலாளிகளுடன் கலந்தாலோசித்து எடுப்பதற்கு தொழில் அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறையை ஊக்குவிக்கும் வகையில் 20 பேர்ச்சிற்கு குறைவான காணிகளில் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கு 5,000 ரூபாவும் 20 பேர்ச்சஸ் மற்றும் ஒரு ஏக்கருக்கு இடைப்பட்ட காணிகளுக்கு 10,000 ரூபாவையும் கொடுப்பனவாக வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு தோட்டக் குடும்பங்களுக்கும் மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மாவை ஒரு கிலோ 80 ரூபாய் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நேரத்தில், தனியார் துறையினர் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை கோரியிருந்தனர்.

இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி பஸ்நாயக்க கையொப்பமிட்ட நவம்பர் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில், வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு 18,000 ரூபாய் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரினார்.

வரவு செலவுத் திட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அரச சேவையை விஸ்தரித்துள்ளதால் சம்பள உயர்வை வழங்க முடியாது என தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்கு அரச ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments