தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சியில் இந்தியா தலையிடுகிறதா என்ற விசாரணையை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வடக்கின் அரசியல் கட்சியொன்று அச்சம் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் (CTID) இது தொடர்பாக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக போராளிகளின் கட்சி தெரிவித்துள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு (ATA) எதிராக உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
“புலிகள் அமைப்பிற்கு இந்தியா உயிர் கொடுக்கிறதா, இந்தியா பணம் கொடுக்கிறதா, இவர்கள் என்ன செய்ய வேண்டும் அவர்கள் கேட்கிறார்கள், இலங்கை அரசுக்கு எதிராக ஏதாவது செய்கிறார்களா? என பல கேள்விகள் கேட்கிறார்கள்.” என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் ஐ.கதிர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து பயங்கரவாத புலனாய்வு அதிகாரிகள் தனது யாழ்ப்பாண வீட்டிற்கு வந்து நான்கு மணித்தியாலங்கள் ஐம்பது நிமிடங்கள் விசாரணை நடத்தியதாக அவர் கூறுகிறார்.
அவரது குடும்ப உறுப்பினர்களை அச்சமடைய வைக்கும் வகையில் இரண்டாவது முறையாக அவரிடம் விசாரணை நடத்திய பயங்கரவாத விசாரணை அதிகாரிகள், வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் அதில் இந்தியாவின் தலையீடுகள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
“பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட இந்தியா நிறைய உதவி செய்திருந்தாலும், இலங்கை அரசு இந்தியாவுடன் வெளிப்படையாக நல்லெண்ணத்தைக் காட்டுகிறது, ஆனால் உள்ளுக்குள் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளது.”
இந்திய சார்பு மனப்பான்மைக் கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியினர் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழித்தல், மாகாண சபைகளுக்குரிய அனைத்து அதிகாரங்களையும் கையகப்படுத்துதல், பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
“இந்த மாநாடு குறித்தும் நீண்ட நேரம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்திய அதிகாரிகளுடன் இந்த விவகாரங்களை நான் விவாதித்தேன் என்பது அனைவரும் அறிந்த உண்மை.”
போராளிக் கட்சி கடந்த எட்டு வருடங்களாக ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றது.
“சில தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து எமக்கு எதிராக சதி செய்கின்றன. எனினும் இது குறித்து அறிக்கை தயாரித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஏனைய தூதரகங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வழங்குவோம்.” என்கிறார் கட்சியின் செயலாளர்.