இலங்கையில் முதலில் தேயிலை செய்கையை ஆரம்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க லூல்கந்துர தோட்டத்தை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கண்டி தெல்தோட்டை லூல்கந்துர தோட்டத்தை தனியாருக்கு விற்கும் திட்டம் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 25ஆம் திகதி கொள்வனவு செய்வோர் குழுவொன்று தோட்டத்திற்கு வந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடர்ச்சியான பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளனர்.
தோட்டம் தனியார் மயமாக்கப்படமாட்டாது என லூல்கந்துர தோட்ட முகாமையாளர்கள் எழுத்து மூலமான உறுதிமொழி வழங்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் போராட்டத்தையும் கைவிடப்போவதில்லை என தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெய்லர் 1867ஆம் ஆண்டு இலங்கையில் தேயிலை செய்கையை லூல்கந்துர தோட்டத்தில் ஆரம்பித்தார்.
70களில், லூல்கந்துர தோட்டம் தேசியமயமாக்கலின் கீழ் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் கீழ் கொண்டுவரப்பட்டது.