ஜனாதிபதியின் நட்டஈட்டை வடக்கு கிழக்கில் உள்ள தாய்மார்கள் நிராகரிக்கின்றனர்

0
Ivory Agency Sri Lanka

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பெறுவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவியான தமிழ்த் தாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.

2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை (வரவு செலவு திட்டம்) நாடாளுமன்றத்தில் நவம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில், ‘வடக்கு கிழக்கில் உள்ளக மோதலால் காணாமல் போனோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்காக1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

“சமர்ப்பிக்கப்பட்ட இழப்பீட்டுக் கோரிக்கைகளில், 6,300 க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏற்கனவே ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு மேலும் 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழிகிறேன்.”

முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நவம்பர் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் அறிக்கைக்கு பதிலளித்த முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி பணத்தைப் பெற்றுக்கொள்ளப்போவது இல்லை எனத் தெரிவித்தார்.

“நேற்று நாடாளுமன்றத்தில் எங்களுக்கு எதிர்வரும் வருடத்திற்கான பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாம். காணாமல் போன உறவுகளுக்கு நட்டஈட்டை கொடுப்பதற்கு. அதிலே எங்களுக்கு ஒரேயொரு தெளிவு வந்துள்ளது. சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு தாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கைது செய்து வைத்துள்ளோம் என்பதை மாத்திரம் உறுதிப்படுத்தியுள்ளனர். நிதி ஒதுக்கீடு காணாமல் போனவர்களுக்கு வரும்போது காணாமல் போனவர்களை வைத்துள்ளமையாலேயே அந்த நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளனர். ஆனால் இந்த நிதி ஒதுக்கீடு எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் எங்கள் நிதி ஒதுக்கீட்டை புறக்கணிக்கின்றோம்.”

ஜனாதிபதியால் சர்வதேசத்தை ஏமாற்ற முடியும் ஆனால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்களை ஏமாற்ற முடியாது எனவும் மரியசுரேஷ் ஈஸ்வரி மேலும் தெரிவித்துள்ளார்.

“யுத்தம் முடிந்து 15 வருடங்கள். அத்துடன் வேறு வேறு மாவட்டங்களில் பல வருடங்கள் சென்றும் நிதி ஒதுக்கீட்டை செய்ய மறந்துவிட்டார்களா? இல்லாவிடின் காணாமல் போனவர்கள் இருக்கின்றார்கள் என்ப மறந்துவிட்டார்களா? ஆனால் சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியில் இன்று அவர்களுக்கு நினைவு வந்து அவர்கள் அந்த நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளனர். இது அவர்களின் செலவுக்கும் அவர்களை சுற்றியுள்ளவர்களின் செலவுக்கும் என்றுதான் நாம் கருதுகின்றோம். இவர்கள் சர்வதேசத்தை இந்த நாட்டு ஜனாதிபதி ஏமாற்றலாம் எனினும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்ற முடியாது.”

இலங்கை நாடாளுமன்றத்தின் 78ஆவது வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பித்த 8ஆவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரை 181 காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளக முரண்பாட்டினால் பாதிக்கப்பட்டு காணாமற்போன மற்றும் பாதிக்கப்பட்ட 181 பேருக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் 170 பேருக்கு 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இழப்பீடு வழங்கப்படும்.”

ஆனால் வடக்கு கிழக்கில் போரினால் காணாமல் போன 203 பேருக்கு 2023 ஜூலைக்குள் 40.6 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் யுத்தத்தின் இறுதிக் காலத்தில் பாதுகாப்புப் படையினர் பொறுப்பேற்ற பின்னர், காணாமல் போன தமது உறவுகளின் கதியை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி சத்தியாக்கிரக போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த பதினைந்து வருடங்களாக தமிழ் மக்கள் யுத்தத்தின் போது அரச படையினரிடம் சரணடைந்து, கடத்தப்பட்ட பின்னர் காணாமல் போன தமது அன்புக்குரியவர்களின் கதி என்ன என்பதை வெளிக்கொண்டுவர சர்வதேச தலையீட்டை கோரி வருகின்றனர்.

அரச பாதுகாப்புப் படையினர் பிரதான சந்தேகநபர்களாக இருப்பதால், போர்க் குற்றச் சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அரசியல் விருப்பம் இல்லை என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அறிவித்து, அரசாங்கம் முன்வைத்துள்ள காணாமல் போனோருக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளவும், நட்டஈட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்ளவும், தமது அன்புக்குரியவர்களை இழந்த போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தாய்மார்கள் பகிரங்கமாக மறுத்துள்ளனர்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு மற்றும் தனது முன்மொழிவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில், வடக்கு கிழக்கு மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற 21,374 முறைப்பாடுகளில் இதுவரை 3,462 பேரின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன், எஞ்சிய முறைப்பாடுகளுக்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது முழுமையாக செயற்பட்டதன் பின்னர் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் போன தமது உறவினர்களைத் தேடி வடக்கு கிழக்கில் ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐநூறு நாட்களாகப் போராடி வரும் முன்னணி உறுப்பினர்களின் கருத்துப்படி நீதி கிடைக்காமல் உயிரிழந்த பெற்றோரின் எண்ணிக்கை 188க்கும் அதிகமாகும்.

Facebook Comments