தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை அபகரித்து வடக்கில் பௌத்த விகாரை இராணுவத்தினரால் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஒரு வருட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் அந்த காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்யாவிடின் அந்த காணிகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டியிருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கடந்த காங்கேசன்துறை திஸ்ஸ விகாரைக்கு முன்பாக நின்று நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) வெளியிட்ட காணொளியில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
“தனியாருக்கு சொந்தமான 120 பரப்பு காணிகள் இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த காணிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அந்த உரிமையாளர்கள் கடந்த பல வருடங்களாக கோரி வருகின்ற போதிலும் அவர்களிடம் கையளிக்கப்படவில்லை. இதனால் கடந்த ஒரு வருடமாக இந்த விகாரைக்கு முன்பாக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும் காணியை விடுவிப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலைமைத் தொடருமானால் குடா நாடு முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டங்களை விரிவுப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். மிக விரைவாக இந்த கட்டிடத்தை அகற்றி உரியவர்களிடம் காணியை கையளிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ”
காங்கேசன்துறை, வலிகாமம் வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் வீதியோரத்தில் ஓராண்டாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் தமிழர்கள் ‘சட்டவிரோத விகாரையை உடனடியாக அகற்றுங்கள் எங்களின் காணி எமக்கு வேண்டும். அமைதியை குலைக்கும் பொலிஸாரை நாங்கள் விரும்பவில்லை,” என கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
பிராந்திய காணி அதிகார சபையின் அனுமதியின்றி தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை சுவீகரித்து இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது.” என இலங்கை இராணுவம் ஏப்ரல் 29ஆம் திகதி தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.
“கி.பி. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றைக் கொண்ட இந்த விகாரை, தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது” என இராணுவம் கூறுகிறது.
14 தமிழ் குடும்பங்களின் 6.2 ஏக்கர் நிலத்தை இராணுவம் வலுக்கட்டாயமாக சுவீகரித்து திஸ்ஸ விகாரையை நிர்மாணித்துள்ளதாக தமது காணிகளை விடுவிக்கக் கோரி மாதந்தம் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டம் நடத்தும் தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
விகாரையை நிர்மாணிப்பதற்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர்.