இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உள்ளுர் பொறுப்புக்கூறல் இல்லாமையை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபை, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேச சமூகத்தை கோரியுள்ளது.
அரசாங்கத்தினால் ஏழு வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் (OMP) காணாமல் போன ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியாத போதிலும், சர்வதேச சமூகம் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
“பொறுப்புக்கூறலில் இலங்கையின் முன்னேற்றம் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம், சர்வதேச சமூகம் அதன் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள், உலகளாவிய அதிகார வரம்பு மற்றும் சர்வதேச நீதியின் பிற வழிகள், அத்துடன் இலக்கு விதிக்கப்பட்ட தடைகள் நிவாரணம் உட்பட, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த சர்வதேச சமூகத்திற்கு கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கிறது.”
இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் (OHCHR) ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அண்மைய 46 பக்க அறிக்கையின் மூலம் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
‘பலவந்தமாக காணாமல் போதல்களை அரசியலாக்குவது’ என இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை கண்டித்துள்ளது.
1970ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்து 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடையும் வரையில், இலங்கை பாதுகாப்புப் படைகள் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் எதிரிகளை அச்சுறுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்ட பல வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அலைகளை இலங்கை எதிர்கொண்டதை அறிக்கை நினைவுபடுத்துவதோடு,
குறைந்தது பல்லாயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் எனவும் வலியுறுத்துகிறது.
அனைத்து மட்டங்களிலும் உள்ள குற்றவாளிகள் தொடர்ந்து நீதியிலிருந்து தப்பித்துக்கொண்டிருப்பதைக் காட்டும் அறிக்கை, தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஆழமாக வேரூன்றியிருப்பதால் எதிர்காலத்தில் மீண்டும் நிகழும் அபாயம் குறித்து எச்சரிக்கிறது.
“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர்களின் கதி மற்றும் நிலை குறித்து எந்தத் தகவலும் அறிய முடியாத நிலைமை காணப்படுகிறது. கட்டமைப்பு பலவீனங்களை நிவர்த்தி செய்து தேவையான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தவறினால் மேலும் காணாமல் போகும் அபாயம் உள்ளது.”
அண்மைய ஆண்டுகளில், இலங்கை அனைத்து நபர்களையும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டதோடு (ICPED), பலவந்தமாக காணாமல் போதலை ஒரு குற்றமாக அங்கீகரித்தமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஆணைக்குழுக்களை நிறுவியமை, காணாமல் போனோர் அலுவலகம் (OMP) மற்றும் இழப்பீடு அலுவலகம் (OR) உட்பட விசாரணை ஆணைக்குழுக்களை (CoIs) ஸ்தாபித்தல் உட்பட பல சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளான, உண்மையை அறிதல், நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றில் நிலையான முன்னேற்றத்தை அடையவில்லை. மேலும் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தலைவிதி மற்றும் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லாத வரை, காணாமல் ஆக்கப்பட்டமை ஒரு “தொடரும் மீறலாக” கருதப்படும எனக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல் இல்லாமை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் ‘ஏமாற்றமளிக்கும் அவலநிலை’ என வர்ணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சமூகத்திற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட 39 பேருடன் இருதரப்பு நேர்காணல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட 43 பேருடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில், இடைவெளியைத் தீர்ப்பதற்கான தொடர்ச்சியான பரிந்துரைகள் இலங்கை அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளன. விவாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர்.
இது தொடர்பாக, ஐ.நா அலுவலகம் முதன்மையாக, காணாமல் போனவர்களின் அளவு மற்றும் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் மற்றும் துணை இராணுவக் கும்பல்களின் ஈடுபாட்டை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
“பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை மற்றும் வழக்குத் தொடர்வதற்கான பயனுள்ள கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கு சுயாதீன விசாரணைகளை தீவிரப்படுத்தவும் அரசியலமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்களை துரிதப்படுத்தவும் இலங்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.”
சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் கடுமையான மீறல்களை அவசரத் தேவையாகக் கருதி இலங்கையில் ஒரு சுயாதீன வழக்குத் தொடரும் அதிகாரம், ஒரு விசேட சட்டத்தரணி மற்றும் தற்காலிக விசேட நீதிமன்றத்தை நிறுவுவதற்கு அறிக்கை பரிந்துரைக்கிறது.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் முன்னேற்றம் தொடர்பில் OMP அலுவலகமும் அரசாங்கமும் சர்வதேச சமூகத்திற்கு முன்வைத்துள்ள புள்ளிவிபரங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
“OMPஅலுவலகம் காணாமல் போனவர்களைத் தேடும் பணியைத் ஆரம்பிக்கவில்லை.
அதன் முன்னேற்றம் குறித்த அறிக்கையில், OMP குறைந்த அளவிலான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது, இது 2023ஆம் ஆண்டளவில் இரண்டு முதல் மூன்று சம்பவங்களாக குறைக்கலாம் எனக் கூறியது. மாறாக, மார்ச் 2024 இல், OMP தேடுதல் பிரிவு 19 வழக்குகளை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்தது.”
பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் கேள்விகளைக் கேட்க அல்லது அறிக்கைகளைப் பெற,
தடுப்பு மையங்களுக்குச் செல்ல OMP தனது பரந்த சட்டரீதியான அதிகாரங்களைப் பயன்படுத்தத் தவறியது உறவினர்களை விரக்தியடையச் செய்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் அறிக்கை, OMP தனது ஆணையை வழங்குவதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
OMP அலுவலகத்தின் ஆயுள் உள்ளவரை, தம் அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மையை வெளிக்கொணரக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ்த் தாய்மார்கள்,
சர்வதேச சமூகம் தான் நிராகரித்த ஒரு நிறுவனத்தை ஆதரிப்பது குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை கவலை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், காணாமல் போனோர் அலுவலகத்தை (OMP) மேம்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் உதவுமாறு அறிக்கை கோரியுள்ளது.
வெகுஜன புதைகுழிகள் குறித்து முறையான விசாரணை நடத்துவது, இதுவரையான ஜனாதிபதி அனைத்து ஆவணக் காப்பகங்கள் மற்றும் விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவது உட்பட பதினெட்டு பரிந்துரைகளை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுவதற்கு முன்னர், அதனை செயற்படுத்துவதற்கு இயலுமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும் மிக முக்கியமான நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் OHCHR பரிந்துரைக்கிறது.
இதற்காக, மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல் மற்றும் சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான கண்காணிப்பு முடிவுக்கு வந்துள்ளதாகவும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
“எந்தவொரு உண்மையைத் தேடும் பொறிமுறையும், ஒரு நீதித்துறைப் பொறிமுறைக்குள், ஒரு பரந்த நிலைமாற்று நீதி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இதேபோல், OHCHR இழப்பீடுகளுக்கு ஒரு விரிவான மற்றும் பாலின-உணர்திறன் அணுகுமுறையை பரிந்துரைக்கிறது.”
மேலும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கும் OHCHR, மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளை உயர்மட்ட பதவிகளுக்கு நியமிப்பதையோ அல்லது பதவி உயர்வு செய்வதையோ தவிர்க்குமாறும் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிற்கு ஐ.நாவின் எந்தவொரு தீர்மானமும் அதிகாரமளிக்கவில்லை என, வெளிவிவகார அமைச்சின் பெயர் குறிப்பிடப்படாத ஊடக தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஜெனீவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணதிலக்க, உயர்ஸ்தானிகர் மற்றும் ஏனைய உறுப்பு நாடுகளுக்கு எழுத்து மூலம் இந்த விடயத்தை முன்வைப்பார் என அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.