இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் சுமையை சிறுவர்கள் சுமக்கிறார்கள்: ஐ.நா

0
Ivory Agency Sri Lanka

இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிள்ளைகளுக்குப் பிரதான உணவைக் கூட வழங்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கைக்கு அமைய, கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அடிப்படையில் தெற்காசிய பிராந்தியத்தில் மிக உயர்ந்த இடத்தில் இலங்கை ஏற்கனவே உள்ளமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர் நிதியத்தின் (UNICEF) தெற்காசியப் பணிப்பாளர் ஜோர்ஜ் லரியா-அட்ஜே அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்த பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொருளாதார அதிர்ச்சிகள் இலங்கையை தொடர்ந்து உலுக்கி வருவதால், அது மிகவும் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தரப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குடும்பங்கள் வாழ்வதற்கு மிகவும் சிரமமாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் உள்ள சிறுவர் குழுவொன்று தமக்கு அடுத்தவேளை உணவை எங்கிருந்து பெறுவது என்பது தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முக்கிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாததால் குடும்பங்கள் அடிப்படை உணவைத் தவிர்த்து வருகின்றன. தெற்காசியாவில் ஏற்கனவே இரண்டாவது மிக அதிகமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாட்டில் – சிறுவர்கள் பசியுடன் நித்திரைக்குச் செல்கிறார்கள், அவர்களுக்கு அடுத்த உணவு எங்கிருந்து வரும் என தெரியவில்லை.”

தொடர்ந்து அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டு சிறுவர்கள் எதிர்கொள்ளும் வேறு சில பிரச்சனைகள் குறித்தும் அவர் தனது அறிக்கையில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

“அதிகரிக்கும் பொருளாதார அழுத்தங்கள் காரணமாக சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஏற்கனவே அதிக அறிக்கைகள் வெளிவருகின்றன. இலங்கையில் ஏற்கனவே 10,000ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் நிறுவன பராமரிப்பில் உள்ளனர், முக்கியமாக வறுமையின் விளைவை அது. குடும்பத்தின் பிணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு குழந்தை வளர இத்தகைய நிறுவனங்கள் சிறந்த இடங்கள் அல்ல. ஆனால் தற்போதைய நெருக்கடி அதிகமான குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை இந்த நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லத் தூண்டுகிறது, ஏனெனில் அவர்களால் உணவு உட்பட அவர்களின் தேவைகளை வழங்க முடியாது.”

நிலைமையை மேலும் விளக்கிய ஜோர்ஜ் லரியா-அட்ஜே, பொருளாதார நெருக்கடி இலங்கையில் சிறுவர்களின் கல்வியையும் கடுமையாகப் பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கை சிறுவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே ஏதாவது ஒருவகையில் அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்.
4.8 மில்லியன் சிறுவர்களின் கல்வி, ஏற்கனவே இரண்டு வருட கற்றல் தடைப்பட்டதால் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, பாடசாலை வருகை தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதால், அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி சிறுவர்களின் கல்வியை பல வழிகளில் சீர்குலைத்து வருகிறது – நெருக்கடிக்கு முன்பு அவர்கள் வைத்திருந்த சூடான மற்றும் சத்தான உணவு சிறுவர்களுக்கு இனி கிடைக்காது.
அவர்களிடம் அடிப்படை எழுதுபொருட்கள் இல்லை, அவர்களின் ஆசிரியர்கள் போக்குவரத்து பிரச்சினைகளில் போராடுகிறார்கள்.”

நாட்டிலுள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவர்களில் 11 இலட்சம் பேருக்கு பாடசாலை மதிய உணவுத் திட்டம் இருக்கின்ற போதிலும், ஒரு மாணவனுக்கு ஒதுக்கப்படும் தொகை ஒரு முட்டையின் விலையைவிட குறைவாக காணப்படுவதாக இலங்கையின் பிரதான கல்வி நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

“43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இருக்கிறார்கள், அதில் 11 இலட்சம் பேருக்கு பாடசாலை மதிய உணவுத் திட்டம் இருக்கிறது, ஆனால் அதற்குக் கொடுக்கப்பட்ட தொகை 30 ரூபாய் என்பது முற்றிலும் குழப்பமாக காணப்படுகின்றது.
60 ரூபாயா ஆக உயர்த்தப்பட்டாலும் முட்டையின் விலை 60 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. தற்போதைய பொருளாதார பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, அந்த விலையில் சிறுவர்களுக்கு சத்தான உணவை வழங்க முடியாத சூழ்நிலையில், சத்துணவு வழங்குனர்களுக்கும், பாடசாலைகளுக்கும் இடையே உடன்பாடு இல்லாமையால், மதிய உணவு திட்டம் கடும் நெருக்கடியில் உள்ளது,” என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“நான் இலங்கையில் பார்த்தது தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.” என யுனிசெப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோர்ஜ் லரியா-அட்ஜே தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தெற்காசியா முழுவதும் பரவி வரும் கடுமையான பொருளாதார பாதிப்பு மற்றும் பணவீக்கம் சிறுவர்களின் உயிருக்கு மேலும் அச்சுறுத்தலாக உள்ளது.
உலகளவில் சிறுவர்களின் ஆரோக்கியம், கல்வி மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் கடுமையான வறுமை, ஆழ்ந்த கஷ்டங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றில் ஐந்தில் ஒருவருக்கு இந்த தெற்காசியப் பகுதி ஏற்கனவே தாயகமாக உள்ளது.

சிறுவர்களால் உருவாக்கப்படாத ஒரு நெருக்கடியின் விளைவுகளை அனுபவிக்க விட முடியாது, மேலும் அவர்கள் தங்கள் நாளை பாதுகாக்க இன்றே செயல்பட வேண்டுமென அவரது அறிக்கையின் முடிவில், ஜோர்ஜ் லாரியா-அட்ஜே வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments