ஆறு வருடங்கள் கடந்தும் பகிரங்கப்படுத்தப்படாமல் இருக்கும், 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘திகன கலவரம் இடம்பெற்று ஆறு வருடங்கள்: நீதி எங்கே?’ என்ற ஆவணப்படத்தில் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என முன்வைக்கப்பட்ட விடயத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும் அரசியல் அமைப்பு சபையின் தலைவரான சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார்.
““சபாநாயகரே உங்களுக்குத் தெரியும், சுயாதீன ஆணைக்குழுக்கள் அணைத்தும், உங்களுக்கு கீழ் அவதானிக்கப்படும் ஆணைக்குழுக்கள் காணப்படுகின்றன. அதற்கு நீங்கள் அரசியல் அமைப்புச் சபையின் தலைவர் என்ற வகையில் அதற்கான அதிகாரிகளும் அரசியல் அமைப்புச் சபையின் ஊடாகவே நியமிக்கப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு திகன சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியது. இன்றோடு ஆறு வருடங்கள் ஆகின்றன. அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால்தான், அதுபற்றி ஆராய்ந்து அந்த அறிக்கையை கிடைக்கப்பெறச் செய்யுமாறு உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.”
விசாரணைக்கு தலைமை தாங்கிய ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி கலாநிதி தீபிகா உடகம மற்றும் தற்போதைய ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான கலாநிதி கெஹான் குணதிலக ஆகியோர் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆவணப்படம் திரையிடப்பட்ட பின்னர் கலாநிதி கெஹான் குணதிலக்க பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.