இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் யுத்த சூனிய பகுதிக்குள் இலங்கை இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டுள்ளார்.
போர்க்காலச் சூழ்நிலைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக அறியப்படும் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அந்த கட்சியின் யாழ். அலுவகலத்தில் இடம்பெற்றுள்ளது.
அதன் போது புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றியதோடு, பின்னர் ஈழநாதம் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு ஆய்வுக் கட்டுரைககளையும் சத்தியமூர்த்தி எழுதியுள்ளார்.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுத்கட்ட போர்க்காலத்தின் பெப்ரவரி மாதத்தில், முல்லைத்தீவில் இலங்கை இராணுவம் எறிகணைத் குண்டுத் தாக்குதல்களை நடத்தியபோது, யுத்த சூனிய பகுதிக்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அவர் காயமடைந்தார்.
சத்தியமூர்த்தி உடனடியாக உயிரிழக்கவில்லை எனவும், முறையான வைத்திய சிகிச்சை அளிக்கப்படாமையே அவரது மரணத்திற்கு காரணம் எனவும் உறவினர்களை மேற்கோள்காட்டி அந்த நேரத்தில் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஊடகவியலின் தரங்களைப் பேணியதோடு, போர்க்காலச் சூழ்நிலைச் செய்திகளை அவர் வெளிப்படுத்தியதாகவும், அவரது பணி போரின் பாதிப்புகளை எடுத்துரைத்ததோடு, வெளிநாடுகளில் வாழும் ஏராளமான தமிழர்களை சென்றடைந்ததாகவும், ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு (CPJ) தெரிவிக்கின்றது.
போரின் இறுதி மாதங்களான, 2009 ஜனவரி முதல் மே வரையில் மூன்று யுத்த சூனிய வலையங்களை இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டு, இந்த பிரதேசங்களில், சுமார் 300,000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கூடுமாறு படையினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அரசால் யுத்த சூனிய வலையங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளும் வான்வழித் தாக்குதல்களும், ஷெல் தாக்குதல்களும் இடம்பெற்றன.