கொழும்பு துறைமுக வெகுஜன புதைகுழி; எஞ்சிய பணிக்கான செலவு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டது

0
Ivory Agency Sri Lanka

 

இலங்கை தலைநகரின் உயர் பாதுகாப்பு வலய பகுதியில் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் மூன்றாவது நாளில் இரண்டு பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை அடுத்து பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட புதைகுழியின் விசாரணையை நீண்டகாலம் இடைநிறுத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ள தடயவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, அகழ்வுக்குத் தேவையான பணத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் பணகளை ஒக்டோபர் 17ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகவே மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் முதற்கட்ட அகழ்வுப் பணியின் பின்னர், செப்டெம்பர் 13, தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, குறைந்தது இரண்டு பேரின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டதுடன் மேலும் நான்கு மண்டை ஓடுகள் அகழ்வுக் குழியில் கண்டுபிடிக்கப்பட்டன.

செப்டெம்பர் 26ஆம் திகதி இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 28ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, மாலை வேளையில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், அதற்குள் மேலும் மனித எலும்புகள் இருப்பதை அறிந்தனர்.

இந்த பாரிய புதைகுழி தொடர்பான விசாரணைகள் விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகே மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

புதைகுழியை முழுமையாக அகழ்வதற்கு இன்னும் ஒரு மாத காலம் ஆகும் எனக் கூறும் பேராசிரியர் ராஜ் சோமதேவ, அதற்கான செலவீன மதிப்பீட்டை துறைமுக பொலிஸாரிடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளார்.

ஜூலை 13, 2024 அன்று, கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டும் போது கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

Facebook Comments