“தவறாகப் பயன்படுத்தப்பட்ட” பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் மாற்றம்

0
Ivory Agency Sri Lanka

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக சட்டமூலமொன்றை முன்வைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

தற்போதைய சமூகப் போக்குகளின் அடிப்படையில் புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

“இதற்கமைய 1865 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.”

தற்போது நடைமுறையில் உள்ள 1865ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டம் இதற்கு முன்னர் 37 தடவைகள் திருத்தப்பட்டதாக, நவம்பர் 21ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதான தீர்மானங்கள் குறித்து அரச தகவல் திணைக்களத்தின் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 19, 2014 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமும் குறித்த கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய சமூகப் போக்குகளின் அடிப்படையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தாம் அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், அந்த புதிய போக்குகள் என்ன என்பதை அமைச்சரவை தீர்மானங்களில் விளக்கவில்லை.

கடந்த காலங்களில் சிவில் போராட்டங்களின் போது பொலிஸ் கட்டளைச் சட்டத்தை பொலிஸார் தவறாக பயன்படுத்தியதாக மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

கடந்த மாதம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, பொது பாதுகாப்பு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதிக்கும் விதத்தில் பொலிஸ் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என பொலிஸாரை அறிவுறுத்துமாறு பொலிஸ் மா அதிபரை வலியுறுத்தியிருந்தார்.

Facebook Comments