கொரோனா நிலைமையில் ஊழியர்களின் உரிமைகள் தொடர்பில் ஏழு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு கடிதம்

0
Ivory Agency Sri Lanka

கொரோனா தொற்று நெருக்கடியால் உற்பத்திகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாம் தொடர்ந்தும் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் உதவி கோரி, ஒருநாள் கடந்துள்ள நிலையில் அந்த தொழிற்சாலைககளில் பணியாற்றும் ஊழியர்கள் தாம் பொருளாதார ரீதியாக எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகைள தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்று நோய் காரணமாக தொழில் பாதுகாப்பு குறித்து நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியுள்ள ஊழியர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்யும் சுயாதீன வர்த்தக வலய ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி ஏழு தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சரிடம் தமது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி வெளிவிவகார, திறன்விருத்தி, தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கு இந்த தொழிற்சங்கங்கள் எழுத்தியுள்ள கடிதத்தில், கடந்த பல தசாப்தங்களாக ஆடைத் தொழில் உள்ளிட்ட ஏற்றுமதி செயலாக்க தொழில்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்திற்கு வழங்கிய பங்களிப்பு மகத்தானது என குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள கடினமான தருணத்திலும் அவர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்வது தொழில் வழங்குநர்கள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

சுதந்திர வர்த்தக வலையத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்களுடன், ஏனைய 20 தொழிற்சங்கங்களும் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து தொழில் அமைச்சருக்கு எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் தமது முன்மொழிவுகள் குறித்து மேலதிக பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஏற்கனவே தமது வீடுகளுக்கு திரும்ப முடியாத பல ஊழியர்கள் இன்னும் வாடகை மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளதாகவும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கங்கள், அவர்கள் தொடர்பில் விரைவாக கணக்கெடுத்து, அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

கடந்த ஒரு மாதமாக உதவி அற்றவர்களாக இருப்போருக்கு அவர்களின் வீட்டு வாடகை அல்லது தங்குடத்திற்கான வாடகையை செலுத்தும் விடயத்தில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் அமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

கொரோனா தொற்று குறைவடையும் சூழல் காணப்படாத நிலையில், ஏற்றுமதி செயலாக்க துறையை மீண்டும் ஆரம்பிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை, தொழிலாளர்களின் உயிரின் பெறுமதியை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளன.

மூன்றாவதாக கடந்த காலத்தில் ஊழியர்களின் சேவைக்கான சம்பளம், மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் பண்டிகைக்கால முற்பணக் கொடுப்பனவுகளை தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலையை காரணம் காட்டி வழங்காமல் இருக்கக் கூடாது எனவும் இந்தக் கொடுப்பனவுகளை உடனடியாக செலுத்துதை உறுதிசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நான்காவது விடயமாக ஊழியர்களின் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகைள நிவர்த்தி செய்வதற்கும் பொதுத்துறை, முதலீட்டு சபை மற்றும் வர்த்தக தொழிற்சங்கங்களை ஒன்றிணைந்து பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் தொழிற்சங்கங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்களை தொடர்ந்தும் பணியில் நீடிப்பது கடினமானது என தொழில் வழங்குநர்கள் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளதையும் வர்த்தக தொழிற்சங்கள் ஐந்து விடயமாக சுட்டிக்காட்டியுள்ளன.

ஆடை ஏற்றுமதி சங்கங்களின் கருத்துக்களின் படி, அடுத்துவரும் நாட்களில் ஆடைத்தொழில்துறையிலுள்ள 30 வீதமான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொவிட் 19 அனர்த்தம், கடுமையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு வித்திடும் என்பதுடன், அதனால் ஏற்படும் பாரிய அளவான வேலையிழப்பு, பாரிய சமூக பேரழிவுக்கு வழிவகுக்கும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

அதேபோன்று நாட்டின் பொருளாதாரத்தின் பாரிய சுமைதாங்கியாக இருந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை தற்போதைய தருணத்தில் கைவிடாமல் பாதுகாப்பது அரசாங்கத்தினதும் நிறுவன உரிமையாளர்களதும் மனிதாபிமான பொறுப்பாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கங்கள், ஊழியர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் வகையில் ஆறு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளன.

தொழிற்துறையின் தற்போதைய நிலைமை மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் நிலைமைகள் குறித்து உண்மையானதும் வெளிப்படைத்தன்மையுடனும் தொழிற்சங்கங்களும் தொழில் வழங்கும் நிறுவனங்களும் கலந்துரையாட வேண்டும்.

உலகளாவிய சந்தை மற்றும் உள்ளுர் தொழில்துறையில் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கு மத்தியில் அடுத்த சில மாதங்களுக்கு ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், தொழில் வழங்கும் நிறுவனங்கள், கொள்வனவாளர்கள், வர்த்தக நாமம் கொண்டவர்கள் மற்றும் அரசாங்கத்தினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஏற்கனவே முற்பதிவு செய்தவற்றை கொள்வனவு செய்வதற்கு, சர்வதேச கொள்வனவாளர்கள் மற்றும் வர்த்தக நாமம் கொண்டவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்றுமதி நிறுவனங்களும் அரசாங்கமும் எடுக்க வேண்டும்.

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு ஊழியர்களை பதவிநீக்கம் செய்வது உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகள் தொடர்பான நிர்வாக சட்டங்களில் எந்தவொரு திருத்தமும் செய்யக் கூடாது.

ஏற்றுமதி மற்றும் உள்ளுர் சந்தைகளில் புதிய வாய்ப்புக்களை கண்டறிவதில் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும்.

ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், ஏற்கனவே அதிகளவிலான சம்பளம், மேலதிக கொடுப்பனவுகளைப் பெறும் நிறைவேற்று தர அதிகாரிகளின் சம்பளம் மற்றும் வசதிகளிலேயே குறைப்பு செய்யப்பட வேண்டுமே தவிர குறைந்த சம்பளம் பெறும் சாதாரண ஊழியர்களின் சம்பளத்தில் குறைப்புச் செய்யப்படக் கூடாது.

குறைந்த சம்பளம் மற்றும் குறைந்த வசதிகளுடன் ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தின் அதிக பாரத்தை சுமக்கும், ஆடைத்தொழில்துறை மற்றும் அதன் ஊழியர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் வர்த்தக தொழிற்சங்கங்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போதைய கடினமான நேரத்தில் தொழிலாளர்கள் மீதுள்ள அனைத்து சுமைகளையும் சுமக்கும் தமது பொறுப்பில் இருந்து அரசாங்கமும் தொழில் தருநர் நிறுவனங்களும் விடுபட மாட்டார்கள் என நம்புவதாகவும் தொழிற்சங்கள் கூறியுள்ளன.

ஸ்ரீலங்கா வர்த்தக தொழிற்நுட்ப மற்றும் பொது ஊழியர் சங்கம், இறுதிசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடை ஊழியர் சங்கம், டாபிந்து ஒன்றியம், ஸ்டாண்ட் அப் இயக்கம் ஸ்ரீலங்கா, மனித விடுதலைக்கான மேப்பாட்டு, ஸ்ரமபிமணி மையம் மற்றும் விடுதலை இயக்கம் ஆகிய தொழிற்சங்கள் இணைந்து தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிற்கு இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளன.

Facebook Comments