போரில் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னியில் அண்மையில் வெளிப்பட்ட வெகுஜன புதைகுழி பற்றிய விசாரணைக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நிதி கிடைக்காமையால் அகழ்வு பணிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த பாரிய புதைகுழிகள் தொடர்பான எதிர்கால விசாரணைகளுக்காக தொல்பொருள் திணைக்களம் தயாரித்த செலவீன மதிப்பீட்டை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்கு 12 இலட்சம் ரூபாய் கோரப்பட்டுள்ளதாக மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் குழாய்களை புதைக்கும் பணியின்போது வெளிப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீண்டும் அகழ்வுப் பணிகளை திட்டமிட்டதுபோல் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்க முடியாது எனவும், பணம் கிடைக்காமையே இதற்கு காரணம் எனவும் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ முல்லைத்தீவு நீதிமன்றில் இன்று (17) அறிவித்ததாக சட்டத்தரணி கே. எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.
“அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் காரியாலயத்திற்கு பணம் கிடைக்காததால், அகழ்வு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார் .”
அகழ்வுப் பணியை ஓகஸ்ட் 21 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பாக ஓகஸ்ட் 17 ஆம் திகதி இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதிமன்றம் அண்மையில் தீர்மானித்திருந்ததுடன், கொக்குத்தொடுவாய் வெகுஜன புதைகுழியில் மீளவும் ஆரம்பிக்கப்படாதுள்ள அகழ்வு பணிகளுக்கு ஜனாதிபதி செயலகம் நிதியை வழங்குமென, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) கடந்த 8ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி மீண்டும் கூடி ஆலோசித்து மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.பிரதீபன் அறிவித்ததாக சட்டத்தரணி வீ. எஸ். நிரஞ்சன தெரிவிக்கின்றார்.
ஓகஸ்ட் 31ஆம் திகதி இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு பிரதேச செயலகம், முல்லைத்தீவு பிரதேச சபை மற்றும் மின்சார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
போர்க்காலத்தில் அரசாங்கப் படைகளிடம் சரணடைந்து, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் கதி என்னவென்பதை வெளிப்படுத்த சுமார் பதினைந்து வருடங்களாகப் போராடிவரும் வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்த் தாய்மார்கள், புதைகுழி விசாரணை மற்றும் அகழ்வுப் பணிகளில் சர்வதேச நிபுணர்களின் தலையீட்டை கோருகின்றனர்.