அரசாங்கத்தின் தலையீட்டுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில், உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் உரிமைகளை நீர்த்துப்போகச் செய்ய முதலாளிகள் முயற்சிப்பதாக தொழிற்சங்கத் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி, தினேஷ் குணவர்தன மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுடனான சந்திப்பில், பல்லாயிரக்கணக்கான சுதந்திர வர்த்தக வலைய ஊழியர்களை தொழிலிருந்து நீக்குவதற்கும், அவர்களின் தொழில் உரிமையை இல்லாமல் செய்வதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக முன்னணி தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.
மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது எனக் கூறும் முதலாளிகள், மே மாதத்திலிருந்து சம்பளத்தை வழங்க அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக இலங்கை வர்த்தக, தொழில்துறை மற்றும் பொது தொழிற்சங்கத்தின் செயலாளர் சில்வெஸ்டர் ஜயகோடி தெரிவித்துள்ளார்.
மே மாதத்திலிருந்து தொழிலாளர்களின் சம்பளத்தை வழங்க முதலாளிகள் அரசாங்க உதவியைக் கோரியுள்ள முதலாளிமார், எனினும், பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டவில்லை.
தொழிலாளர் சட்டத்தை மாற்றியமைக்க முதலாளிகள் தங்கள் முழு நேரத்தையும் பயன்படுத்துகிறார்கள் என, சுதந்திர வர்த்தக வலையம் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் தலைவர் அன்டன் மார்கஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்களை கொண்டு வர தொழிலாளர் அமைச்சர் முதலாளிகளுக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளித்திருந்த நிலையில், முதலாளிகளின் நான்கு பக்க கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
எனினும், குறித்த கோரிக்கைகளானது, ஊழியர்களின் உரிமைகளைக் குறைக்கும் திட்டமாக அமைந்துள்ளதாக, இலங்கை வர்த்தகம், தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க செயலாளர் சில்வெஸ்டர் ஜயகோடி தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு இன்றியும், ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாமலும், நெகிழ்வான வேலை நேரங்களை பின்பற்றவும் ஊழியர்களை பணிக்க தீர்மானித்துள்ளதாக முதலாளிகள் முன்மொழிந்துள்ளனர்.
எனினும், முதலாளிகளின் இந்த முன்மொழிவுகளை கடுமையாக எதிர்த்த தொழிற்சங்கத் தலைவர்கள், கடந்த பல வருடங்களாக தமக்காக பணயாற்றும் ஊழியர்களுக்கு, இவ்வாறான ஒரு சூழலில் சில மாதங்கள் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத, இத்தகைய நிறுவனங்களை இலங்கையில் நடத்திச் செல்வதன் பிரதிபலன் என்னவென கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் முதலாளிகளின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், கொரோனா தொற்றுநோய் காரணமாக, பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தியதாகவும், தொழிற்சங்கத் தலைவர் சில்வெஸ்டர் ஜயகோடி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில், 22 தொழிற்சங்கங்களால் நிராகரிக்கப்பட்ட “ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தில்” உள்ள விடயங்கள், முதலாளிகளின் முன்மொழிவுகளின் உள்ளடக்கமாக அமைந்துள்ளதாக தந்திர வர்த்தக வலையம் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கத்தின் தலைவர் அன்டன் மார்கஸ் சுட்டிக்காட்டுகிறார்.
முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள ஊழியர்களின் ஏப்ரல் சம்பளத்தை நிறுவனத் தலைவர்களால் வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சில நிறுவனங்கள், நிதி நெருக்கடியில் நிறுவனத்தை நடத்துவதில் கடுமையான சிக்கல் இருப்பதாகக் கூறுவதோடு, கொள்வனவாளர்கள் உலகெங்கிலும் தொற்று நோய்களுக்கு முகங்கொடுத்துள்ளதால், புதிய முற்பதிவுகள் கிடைக்கவில்லை என்ற காரணங்களை முன்வைத்து, ஏற்கனவே தமது பணிநீக்க செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளன.
இதுபோன்ற பல சம்பவங்கள் ஏற்கனவே தங்கள் அமைப்புகளில் நடந்திருப்பதாக தொழிற்சங்கத் தலைவர் சில்வெஸ்டர் ஜயகோடி தெரிவித்துள்ளார்.
இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டு, பணியில் இருந்து விலகுமாறு, ஏக்கல, யக்கல, கேகாலை, மற்றும் கொக்கல ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆறு மாதங்களுக்கும் குறைவான காலம் பணியாற்றிய ஊழியர்களும், ஆளனி நிறுவனங்களின் கீழ் பணிபுரிபவர்களும் இதனால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச புள்ளிவிபரங்களின்படி, 14 சுதந்திர வர்த்தக வலயங்களில் 278 தொழிற்சாலைகளில் 1,37,478 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.