ஸ்ரீலங்காவில் கொவிட் நோயினால் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயாளிகள் என தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்காவில் கொடிய தொற்றுநோயால் உயிரிழந்தவர்களில் 52%ற்கும் அதிகமான மக்கள் நீரழிவு நோயாளிகள் என
இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் கொவிட் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் வைத்தியர் மணில்க சுமணதிலக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோய் மற்றும் பிற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த நோயும் இல்லாதவர்களை விட இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இது அநேகமாக முன்கணிப்பை விட பத்து மடங்கு அதிகம் என விசேட வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
ஏனைய நாடுகளின் புள்ளிவிவரங்களுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்ட இறப்புகளில் 84 வீதம் நீரிழிவு மற்றும் பிற தொற்றாத நோய்களால் ஏற்படுவதாக தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனவே ஸ்ரீலங்காவில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற தொற்றாத நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு நோயாளிகளின் உடலுக்குள் வைரஸ் நுழைந்தவுடன் மூச்சுக்குழாய், கணையம், இதயம் உட்பட ஏனைய உறுப்புகளுக்குள் ஏனையவர்களின் உடலை விட வேகமாக நுழைகிறது.
அவர்களுக்கு நோயினால் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும், வழக்கமான சுவாசக் கோளாறுகள் தவிர திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் அவர்கள் இறக்க நேரிடும் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் வைத்தியர் மணில்க சுமணதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.