தர்மரத்னம் சிவராம் : தான் மிகவும் நேசித்த நீதிக்கான போராட்டத்தில் அப்பா மரணித்தார்

0
Ivory Agency Sri Lanka

போர்ச் செய்தி ஆய்வாளரும் இருமொழி பத்திரிகையாளரும் சுதந்திர ஊடக இயக்கத்தின் முன்னோடியுமான தர்மரத்னம் சிவராம், தலைநகருக்கு அருகில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடந்த ஒன்றரை தசாப்தமாக நீதி பெற்றுக்கொடுக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது.

அவரது மூன்று பிள்ளைகள் தகப்பனான சிவராம் தொடர்பில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் எழுதிய கட்டுரை, ஜே.டி.எஸ் ஸ்ரீலங்கா இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அப்பா மரணித்து இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இன்றுவரை அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எவரும் குற்றவாளியாக காணப்படவில்லை.இது குறித்து நாங்கள் ஆச்சரியப்படவில்லை.எங்கள் குடும்பமும் நீதியை எதிர்பார்க்கவில்லை.அரச நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக எழுதுகின்ற ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா அரசு தொடர்ந்தும் இலக்குவைக்கின்றது.

ஸ்ரீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட அல்லது கொலை செய்யப்பட்ட ஏனைய பல ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புக்கூறாத குறைபாடு தொடர்ந்தும் நீடிக்கின்றது. எங்கள் அப்பாவின் உடல் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே வீசப்பட்டிருந்தது என்பது நாட்டின் ஊடக சுதந்திரத்தின் நிலை மற்றும் தம்முடன் உடன்படாதவர்களை மெளினிக்க செய்வதற்கு அரசு எந்த அளவிற்கும் செல்லும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

அதிஷ்டவசமாக சிவில் யுத்த காலப் பகுதியிலும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் தொடர்பான பதிலைத் தேடும் பலரை போல் அல்லாது, எங்கள் தந்தையின் உடலை மீட்டெடுக்க முடிந்தது.

ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பற்றி விவாதிக்காமல், எங்களது தந்தை பற்றி பேசுவது கடினம் என்பதுடன், சாத்தியமற்றது என்றே நாங்கள் உணர்கின்றோம்.போராதனை பல்கலைகழகத்தில் கல்வி கற்ற ஒரு இளைஞனாக ஸ்ரீலங்கா வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளால் எமது தந்தை பாதிக்கப்பட்டார்.

அதன்விளைவாக தனது கல்வியை இடைநிறுத்த தீர்மானித்து, ஸ்ரீலங்கா அரசினால் கட்டமைப்பு ரீதியில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்தக் நோக்கத்திற்காக அவர் தனது வாழ்க்கையையும் எழுத்துக்களையும் அர்ப்பணித்தார்.

முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட வழிமுறையை வாழும் போது அவர் கண்டிருந்தால், அவர் எவ்வளவு மனமுடைந்திருப்பார் என்பதையும் அவரது பிள்ளைகளாகிய நாம் அடிக்கடி சிந்திக்கின்றோம். ஸ்ரீலங்கா அரசால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான அட்டுழீயங்கள், அவரின் மனமுடையச் செய்திருக்கும்.

அதனால் தான் எமது தந்தைக்கு மரியாதை செலுத்துவது மாத்திரமல்லாமல், யுத்தத்தின் போது தமது உயிரை நீத்த அனைவரையும் குறிப்பாக போரின் முடிவில் முள்ளிவாய்க்காலில் படுகாலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூர வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்கின்றோம்.

தற்போதைய தருணத்தில் எங்களது தந்தைக்கான நீதி என்பது, முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு ஸ்ரீலங்கா அரசு பொறுப்புக் கூற வேண்டும்.

ஆயுத முரண்பாட்டின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் தொடர்ந்தும் காணாமல் போயுள்ள தமது அன்புக்குரியவரிய தமிழர்களின் குடும்பங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் அவசியம். தொடர்ந்து இடம்பெயர்ந்துவாழும் குடும்பங்களுக்கும் வடக்கு கிழக்கில் அரச ஒடுக்குமுறையின் கீழ் வாழும் அனைவருக்கும் நீதி அவசியம்.

அவரின் பிள்ளைகளாக நாம், எங்களை பாதுகாத்து, எங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, சலுகை பெற்ற வாழ்க்கையை வழங்கிய மிகவும் அன்புக்குரிய தந்தையாக அப்பாவை நாம் நினைவில் வைத்துக்கொள்கின்றோம்.

பொருளாதார ரீதியாக சிரமப்படும் தனக்கு தெரிந்த மாணவர்களுக்கு நிதி உதவிகளையும் அவர் வழங்கியுள்ளார். இருப்பினும் அவரது குடும்பத்தை விடவும் தேவை உள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும், தனது எழுத்துக்கள் மூலம் தனது மக்களின் இறையாண்மையை பாதுகாப்பது, அவரது மிக உயர்ந்த குறிக்கோளாக இருந்தது.

பல்வேறு உயிர்அச்சுறுத்தல்களை எதிர்கொண்டபின்னரும் கூட வெளிநாட்டிற்கு குடிபெயர்வதற்கு மறுத்த அவர், தனது பணிகள் ஸ்ரீலங்காவிலேயே இடம்பெறும் எனவும் வாதிட்டிருந்தார்.

பின்நோக்கி பார்க்கும் போது, மிகவும் நேசித்த விடயத்தை செய்து, அப்பா மரணித்தமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.தமிழ் மக்களின் சுயாட்சிக்கான அவரது போராட்டம் ஒருநாள் நிதர்சனமாகும் என நம்புகின்றோம்.

வைஷ்ணவி சிவராம், வைதேகி சிவராம், சிவராம் அன்றூ சேரலாதன்

Facebook Comments