கொரோனா பரவல்; உண்மையை மறைக்கும் கடற்படை ‘PHI குற்றச்சாட்டு’

0
Ivory Agency Sri Lanka

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த தகவல்களை கடற்படை மறைத்தமையால், நோய் பரவலை தடுக்கும் பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில், அதுத் தொடர்பில் சுகாதாரத் துறைக்கு அறிக்கை அளிக்கப்படுவதில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

“இந்த நிலையங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு சோதனையில் கிடைக்கும் முடிவு, நேர்மறையானதா இல்லையா என்பதை சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிப்பதில்லை” என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.உபுல் ரோஹன ராவயவுடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

“நேர்மறையான முடிவுகள் பொது சுகாதார அதிகாரிகளுக்கு அல்லது அப்பகுதியில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுவதில்லை, ஆகவே அது பற்றி எங்களுக்குத் தெரியாது.” என அவர் குறிப்பிட்டுள்ளா்.

இது தொடர்பாக தகவல் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வாய்ப்பில்லை என்பதோடு, அவர்கள் தொடர்பில் வேறு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியாமலுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்துக்கும் சுகாதாரத்துக்கும் இடையிலான உறவில் சிக்கல்கள் இருப்பதாக சங்கத்தின் தலைவர் எம்.ஜி.முல்லேரியாவா கூறுகிறார்.

கடற்படையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் இருப்பதாக உத்தியோகபற்றற்ற முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உபுல் ரோஹ தெரிவித்துள்ளார்.

”கடற்படை உறுப்பினர்களுக்கு சோதனை நேர்மறையாக இருப்பதை அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பொது சுகாதார பரிசோதகர்களிடம் தெரிவித்த சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்திற்கும் சுகாதாரத் துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சிக்கலுக்குரியது எனத் தெரிவித்துள்ள அவர், முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதாரத்துறை என்பன ஒரே வழியில் பயணிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் எந்த நேரத்திலும் நோயளர்களின் எண்ணிக்கை கொத்தாக அதிகரிப்பதற்கான அபாயம் காணப்படுவதாக அச்சம் வெளியிட்டுள்ள, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர், பாடசாலைகளை மீளத்திறக்க வேண்டுமெனின், உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட மார்ச் 10 இரவு முதல் மே 12ஆம் திகதியான இன்றைய தினம் காலை வரையில், பதிவான மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 869 ஆகும்.

அவர்களில் 440ற்கும் மேற்பட்டோர் “கடற்படையினர் என்பதை, பாதுகாப்புப் படைத் தலைவரும், கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Facebook Comments