மஹர படுகொலை: சட்டமா அதிபரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

0
Ivory Agency Sri Lanka

மஹர சிறைச்சாலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் உரிமைகளை பறிக்க சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகள் நீதிமன்றத்தில் தோல்வியடைந்துள்ளன.

பதினொரு பேரைக் கொலை செய்த மற்றும் 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைத் தாக்குதலில் பலியானவர்களை பிரதிநிதித்துவப்படுத்த சட்டத்தரணிகளுக்கு முடியும் என வெலிசர நீதவான் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டார்.

மஹர சிறைச்சாலை படுகொலையில் பலியானவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என அரச சட்டத்தரணியால் அவமானத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரைணையில் சட்டமா அதிபரை பிரதிநித்துவப்படுத்திய அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்ததோடு, சட்டத்தரணிகளுக்கு கருத்து தெரிவிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுத்து கடந்த 23ஆம் திகதி நீதிமன்றில் வாதிட்டார்.

இது தொடர்பாக இரு கட்சிகளும் அளித்த எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் உரிமையை நீதவான் நேற்று உறுதிப்படுத்தினார்.

இந்த உத்தரவு ஒரு வரலாற்று ரீதியானது என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்

மேலும், சட்டத்தரணிகள் நீதிமன்றங்களுக்கு முன்பாக இந்த உரிமையை இழந்திருந்தால், எதிர்காலத்தில் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் அவர்களது வாய்ப்பை இழந்திருப்பார்கள் எனவும், குற்றவாளிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பின்னணி உருவாகியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹர சிறைச்சாலை படுகொலை வழக்கு நேற்று ஏழாவது முறையாக எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, இரண்டு அரசாங்க அமைச்சர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த குழுவொன்றினால் கைதிகளுக்கு ஒருவகை மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் சிரேஷ்ட அரசாங்க அமைச்சரான விமல் வீரவன்ச, மற்றும் அவரது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ஆகியோர் தெரிவித்த கருத்துத் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

இரண்டு மக்கள் பிரதிநிதிகள் வெளியிட்ட கருத்துகள், மஹர சிறைச்சாலையில் நடந்த குற்றத்தை மூடிமறைக்கும் முயற்சியாகும் என சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள், மஹர தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது அவர்கள் இருவரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிபதி இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கருத்துக்களை அரசாங்கத் தரப்பு வெளியிடுவதற்கு முக்கியமான ஆதாரங்கள் அவர்களிடம் காணப்படுமென, பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள் குழு நீதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் உயிரிழந்த எட்டு கைதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிசர நீதவான் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல கடந்த 16ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கைதிகளின் சடலங்களை தகனம் செய்ய உத்தரவிட்டிருந்தார், அதேவேளை வத்தளை நீதவான் நீதிமன்றம் ஏனைய நான்கு உடல்களையும் தகனம் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த மோதலில் கொல்லப்பட்ட 11 கைதிகளில் மேலும் மூன்று உடல்கள் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளன.

மஹர சிறைத் தாக்குதலில் பலியானவர்கள் சார்பில் ஒன்பது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர். இந்த வழக்கு ஜனவரி 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Facebook Comments