வருமானம் ஈட்டும் மற்றுமொரு திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது பாதுகாப்பு அமைச்சு

0
Ivory Agency Sri Lanka

பாதுகாப்பு அமைச்சின் வருமானத்திற்கென தமது அமைச்சின் எல்லைக்குள் இல்லாத மற்றுமொரு நிறுவனத்தை கையகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு தயாராகிவருகின்றது.

கடற்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையை பாதுகாப்பு அமைச்சுடன் இணைக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக கடந்த ஜுலை மாதம் 6 ஆம் திகதி விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடற்சார் சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகார சபை இல்லாத போதிலும் இந்த துறையை இலாபகரமான துறையாக மாற்றுவதற்கு ஒரு பயனுள்ள பொறிமுறையை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயலாற்றுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளரை மேற்கோள்காட்டி பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடற்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையுடன், ஸ்ரீலங்காவின் கடற்படை, ஸ்ரீலங்கா கடலோர காவல்படை, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, ஸ்ரீலங்கா சுங்கம், ஸ்ரீலங்கா துறைமுக அதிகார சபை மற்றும் பொலிஸ் ஆகியன ஜுலை மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் நாட்டிலுள்ள கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்து ஆராயவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வழிகாட்டலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஒய்வுபெற்ற கமல் குணரத்னவின் உதவியுடன் இந்த விசேட செயற்றிட்டத்தை கடற்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை ஆரம்பிக்கவுள்ளது.

சுற்றுலாத்துறை உள்ளிட்ட சிவில் துறைகளில் வர்த்தக விவகாரங்கள் பாதுகாப்பு சேவையில் உள்ளளவர்களால் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக ஸ்ரீலங்கா இராணுவமயப்படுத்தப்படுவதாக உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

நாட்டில் 28 ற்கும் அதிகமான அனுமதிபெற்ற கழிவகற்றல் வசதி சேவைகள் வழங்கப்படுவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையை மேற்கோள்காட்டி பாதுகாப்புச் செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 26,904 கனமீற்றர் அளவு கப்பல் மூலம் வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் சேகரிக்கப்படுவதுடன், 7404 கனமீற்றர் குப்பைகள் பட்டியலில் உள்ள நிறுவனங்களால் சேகரிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள கடல் மற்றும் ஏனைய சுற்றாடல் வலயங்களை மாசுபடுத்தாத பொருட்களினை நாட்டினுள் அனுமதிக்கும் வசதிகளை போதுமானதாகவும் செயற்றிறன்மிக்க வகையிலும் வழங்குவதற்கு கப்பல் கழிவு முகாமைத்துவ செயன்முறையை மறுசீரமைக்க ஜனாதிபதி ராஜபக்ஷ பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

‘தற்போதுள்ள அமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதை அரசு அறிந்துள்ளதால் இந்த செயல்முறையை கண்காணிக்குமாறு ஜனாதிபதி ராஜபக்சவினால் தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மேஜர் ஜெனரல் ஒய்வுபெற்ற கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் கழிவுகளுக்கு அனுமதியளிக்கும் சேவை நிறுவனங்களை வருவாய் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றும் ஒரு பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு வசதிசெய்து மேற்பார்வை செய்யும் மற்றும் ஆதரவளிக்கும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

செயல்முறையை ஒழுங்குபடுத்துவதில் அனைத்து பங்காளர்களையும் ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

வினைத்திறன் மிக்க மறுசீரமைப்பு செயன்முறையை வரைய அனைத்து பங்காளர்களும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, அமைச்சரவையின் அங்கீகாரத்தின் ஊடாக இந்த செயல்முறையை சீராக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இலங்கையில் எந்தவொரு துறைமுகத்தினுள் அல்லது வெளியிலும் கப்பல் கழிவுகளைப் பெறும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வதற்கு அனைத்து பங்குதார நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை ஒருங்கிணைத்து நியமிக்குமாறு கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தலைவர் தர்ஷனி லஹந்தபுரவுக்கு மேஜர் ஜெனரல் குணரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி. ரவிப்ரிய, இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஒய்வுபெற்ற சமந்த விமலதுங்க, மத்திய சுற்றாட் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க, சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு காண பிரதி பொலிஸ் மா அதிபர் அனில் பிரியந்த, இலங்கை துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிபர் நிமல் சில்வா, கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments