தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடி, சுகாதார சேவையும் போராட்டம்

0
Ivory Agency Sri Lanka

நாட்டில் வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பணவீக்கக் கொடுப்பனவைக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுக்க சுகாதார ஊழியர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.

தங்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாது!, பணவீக்க கொடுப்பனவு கொடுங்கள்!, நோயாளிகளைக் கொல்லாதீர்கள்!, மருந்து பற்றாக்குறையைத் தீர்ப்போம்!, மேலதிக நேரத்திற்கு கட்டண முறைக்கு அமைய கொடுங்கள்!, வாரத்தில் மேலதிகமாக பணியாற்றிய 08 மணி நேரத்திற்கு சம்பளத்தில் 01/30 கொடுப்பனவு செலுத்துங்கள்!, போக்குவரத்து செலவுகளை சமாளிக்க முடியாது!, போக்குவரத்து கொடுப்பனவை வழங்குங்கள்!, வங்கிக் கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்தல்!, மற்றும் நிவாரண வட்டி விகிதங்களை வழங்குதல்! ஆகியவை ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளாக அமைந்துள்ளது.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து 2022 ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை வைத்தியசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டிய சுகதானந்த தேரர் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டிலிருந்து சம்பள அதிகரிப்பு இல்லாத நிலையில் பணவீக்கம் அதிகரித்திருப்பதை நினைவுகூரும் டெம்பிட்டிய சுகதானந்த தேரர், பொருட்களின் விலைகள் உள்ளிட்ட அனைத்தும் மும்மடங்காக அதிகரித்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

“அதனால், வாழ்க்கை நிலைமைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதேவேளை, எங்களுக்கு எந்த உதவித்தொகையோ அல்லது நிவாரணமோ கிடைக்கவில்லை.”

எனவே முன்னைய கோரிக்கைகளை வழங்குவதற்கு துரிதமாக செயற்படாவிட்டால் தொழில்சார் நடவடிக்கைகளை கடுமையாக்க நேரிடும் என ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Facebook Comments