ஜயருவன் பண்டாரவை காவல்துறைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு

0
Ivory Agency Sri Lanka

சுகாதாரத்துறையில் மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்துவதற்கு காவல்துறையைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதற்கு பதிலாக அரச அதிகாரிகளின் வெளிப்பாடுகள் குறித்து தொழில்நுட்ப விசாரணை நடத்துமாறு சுகாதார சேவையின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வைத்தியர் ஜயருவன் பண்டார யூடியூப் தளத்திற்கு வழங்கிய செவ்வி தொடர்பாக குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் என்ன குற்றம் கண்டறிப்பட்டது எனத் தெளிவாக தெரியவில்லை எனவும் சுகாதார நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் 31 செவ்வாய்க்கிழமை வைத்திய ஆய்வு நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் ஜயருவன் பண்டார கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு வரவழைக்கப்பட்டார்.

இரண்டு அரச நிறுவனங்களின் மூன்று வைத்தியர்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன, அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் உத்பல இந்திரவன்ச மற்றும் தேசிய சுகாதார ஒழுங்கு முறை ஆணைக்குழுவின் தலைவர் ரசித விஜேவந்த ஆகியோர் முறைப்பாட்டை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அன்டிஜன் சோதனை கருவிகளின் இறக்குமதி மற்றும் அதன் சோதனை நடவடிக்கைகளில் சிக்கல்கள் காணப்படுவதாகவும், தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய சுகாதார ஒழுங்கு முறை ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி ஊழல் மற்றும் தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தரவுத்தளத்தை அழித்தமை தொடர்பாக வைத்தியர் ஜயருவன் பண்டார அண்மையில் ஒரு யூடியூப் தளத்திற்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இலங்கையில் பிசிஆர் சோதனையை 2,000 ரூபாவிற்கு குறைவாகவும், அன்டிஜென் சோதனையை 650 ரூபாய்க்கும் மேற்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

முறைப்பாடு செய்த வைத்தியர்கள் இது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிசிஆர் மற்றும் துரித அன்டிஜன் விலைகள் குறித்து வைத்தியர் ஜயருவன் பண்டார கூறிய கருத்துகள், உண்மைக்குப் புறம்பானதாகத் தெரியவில்லை என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு பிசிஆர் பரிசோதனையை 800 ரூபாய்க்கும், துரித அன்டிஜன் பரிசோதனையை 800ற்கு குறைவாகவும் தேவைப்படுமிடத்து வழங்கலாம் எனத் தெரிவித்துள்ள ரவி குமுதேஷ், நீண்ட காலமாக சிக்கலை எதிர்கொண்டுள்ள தயாரிப்புகளை தேசிய மருந்தாக்கல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒப்புதல் இன்றி விரைவாகப் பெற முடியும் என வலியுறுத்தியுள்ளார்.

எனவே, வைத்தியர் ஜயருவன் பண்டார வெளியிட்ட வெளிப்பாடுகள் குறித்து துரிதமான விசாரணையை நடத்தி, அதன் நன்மைகள் நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார நிபுணர்களின் சங்கம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

தகவல் தருபவர்களை தண்டிப்பது, ஒடுக்குவது மற்றும் அச்சுறுத்துவது மற்றும் உண்மைத் தகவல்கள் வெளியாவதை தடுப்பது “ஊழல் அதிகாரிகளின்” நடைமுறை என ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

”ஆரம்பத்திலேயே குற்ற விசாரணையை நடத்துவது நுட்பமான அச்சுறுத்தல் மற்றும் துல்லியமான தகவல் தெரிவிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகவே கருதுகின்றோம். இது குற்றவியல் விசாரண திணைக்களத்தின் பணிக்கு அவமானமான ஒரு விடயமாகவே கருதுகின்றோம்.” என ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments