வட மாகாண ஆளுநர் குறித்து ஆசிரியர் தலையங்கம் எழுதிய பத்திரிகை ஆசிரியரிடம் பொலிஸார் விசாரணை

0
ඡායා - ෂෙහාන් ගුණසේකර
Ivory Agency Sri Lanka

 

வடக்கில் ஜனாதிபதியின் பிரதிநிதியின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் வெளியிட்ட ஆசிரியர் தலையங்கம் காரணமாக அப்பகுதியிலுள்ள முன்னணி தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் பொலிஸாருக்கு இரண்டரை மணித்தியாலங்கள் பதிலளிக்க வேண்டியிருந்தது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஏப்ரல் 22ஆம் திகதி வாக்குமூலம் வழங்கிய வடக்கில் வெளிவரும் நாளிதழான வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் தம்மை இவ்வாறு கேள்வி கேட்பது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயலாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

“வடமாகாண ஆளுநருக்கு ஒரு அவசர கடிதம்” என்ற தலைப்பில் மார்ச் 18ஆம் திகதி வலம்புரி நாளிதழில் வெளியான ஆசிரியர் தலைப்பு, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸின் செயற்பாடுகள் மற்றும் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்து, வட மாகாண ஆளுநர் அலுவலக கணக்காளர் அண்ணாமலை கலைச்செல்வன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பு அல்லது தென்னந்தோப்புகளுக்கு பூச்சிகளினால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குக் கூட, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தீர்வை வழங்கத் தவறியுள்ளதாக பத்திரிகையின் ஆசிரியர் குற்றஞ்சாட்டுகின்றார்.

“என்ன செய்வது காலப் பிழைப் போல வடக்கு மாகாணத்தின் ஆளுநராகத் தமிழர் ஒருவர் இருக்க வேண்டுமெனக் எங்கள் தலையில் நாங்களே மண்ணை அள்ளிக் கொட்டிவிட்டோம்.” என அவரது ஆசிரியர் தலையங்கத்தில் அதில் கூறப்பட்டுள்ளது.

பத்திரிகையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் தொடர்பில் முறைப்பாடு செய்வதும் அதுத் தொடர்பில் அழைத்து விசாரணை செய்வதும் கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் செயலென, ஏப்ரல் 22ஆம் திகதி காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய வலம்புரி பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“பத்திரிகையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் தொடர்பில் முறைப்பாடு செய்வதும். அதுத் தொடர்பில் அழைத்து விசாரணை செய்வதும் கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்படும் விடயம் என்பதை நான் எனது வாக்குமூலத்தில் தெரிவித்தேன். ஆளுநரின் செயற்பாடுகளுக்கும், நற்பெயருக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த விதத்தில் இது அவரின் கௌரவத்தை பாதிக்கிறது என நான் கேட்டேன்.”

இதுபோன்ற முறைப்பாடுகளால் என்னை அடக்கிவிட்டால் ஏனைய பத்திரிகை ஆசிரியர்களும் அடங்கிவிடுவார்கள் என்பது இவர்களின் எண்ணத்தில் ஆளுநர் அலுவலகம் செயற்படுகிறது என வலம்புரி பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் தெரிவிக்கின்றார்.

“இவர்களைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற வகையிலேயே செயற்படுகின்றார்கள். ஒவ்வொரு பகல் பொழுதும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படாமல் அந்த அலுவலகத்தை திறந்து பூட்டினால் சரி. அதுதான் இங்கு நடைபெறுகிறது. இவர்களைப் பொறுத்தவரையில் என்னை அடக்கிவிட்டால் ஏனையவர்கள் அடங்கிவிடுவார்கள் என்ற ஒரு எண்ணம்.”

Facebook Comments