சனச; ‘வங்கிக்கு நட்டத்தை ஏற்படுத்தி வேட்டையாடப்படும் தொழிற்சங்கத் தலைவர்கள்’

0
Ivory Agency Sri Lanka

சனச அபிவிருத்தி வங்கியின் நிர்வாகம் வங்கியை வேண்டுமென்றே நட்டமடையச் செய்வதாகவும், அதை எதிர்க்கும் தொழிற்சங்கத் தலைவர்களை பதவி நீக்கம் செய்யும் இழிவான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், நாட்டின் பிரதான வங்கிச் ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சனச அபிவிருத்தி வங்கி நிர்வாகம் அதன் முதன்மை கூட்டுறவு நோக்கங்களுக்கு முற்றிலும் புறம்பான வகையில், மிகப் பெரிய வணிக சமூகத்திற்கு உதவும் நோக்கத்துடன் பல சட்டவிரோத பரிவர்த்தனைகள், ஊழல் மற்றும் மோசடிகளை மேற்கொள்வதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அமையபல வருடங்களாக கொடுப்பனவுகளை வழங்குவதை வங்கி நிர்வாகம் தவிர்த்து வருவதாகவும், இலங்ககை வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க கையெழுத்திட்ட ஊடக அறிக்கையில், சனச வங்கியின் குறித்த செயல்முறையை இலங்கை ஊழியர் சங்கம் மாத்திரமே நேரடியாக எதிர்ப்பதால், வங்கியின் நிர்வாகம், சனச வங்கிக் கிளையில் பணியாற்றும் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின், தொழிற்சங்கத் தலைவரை, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக, தண்டிக்கும் நோக்குடன் பதவி நீக்கும் இழிவான முயற்சியை மேற்கொள்கின்றார்கள்.

“குறித்த தொழிற்சங்கத் தலைவர்களில் கிளைத் தலைவர், சிரேஷ்ட உப தலைவர் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் உள்ளனர்.”

சம்மாந்துறை கிளையில் பணியாற்றும் தொழிற் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் அமில சுனிமல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டதால் 173 நாட்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய தலைவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமில சுனிமலை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி, இலங்கை ஊழியர் சங்கம் நேற்றைய தினம் (ஜூலை 22) கிருலபனையில் அமைந்துள்ள சனச அபிவிருத்தி வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

Facebook Comments