வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கிற்கு நீர் விநியோகிக்கப்படவில்லை

0
Ivory Agency Sri Lanka

இலங்கையின் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகங்களுக்கு மாத்திரமே குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறட்சியால் 60,455 குடும்பங்களைச் சேர்ந்த 202,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஜூலை 22 வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (115,559 பேர்) வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, 13,964 பேர் நாட்டின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.

இருப்பினும், முழு வட மாகாணத்திலிருந்தும் வெலியோயா மற்றும் புத்துக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்கு மாத்திரமே குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கூற்றுப்படி, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

20,335 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 64,761 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம் வட மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 17,185 குடும்பங்களைச் சேர்ந்த 57,771 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் 9,382 குடும்பங்களைச் சேர்ந்த 34,805 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,841 குடும்பங்களைச் சேர்ந்த 12,922 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2,939 குடும்பங்களைச் சேர்ந்த 9,758 பேரும், வவுனியா மாவட்டத்தில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 303 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் 6,687 குடும்பங்களைச் சேர்ந்த 22,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய, வறட்சி அறிக்கையின்படி, வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் 4,343 குடும்பங்களைச் சேர்ந்த 13,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமேற்கு மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் 646 பேரும், தென் மாகாணத்தில், ஹம்பாந்தோட்டை, மாவட்டத்தில் 163 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா தவிர மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Facebook Comments