20ஆவது திருத்தம்; சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவிதி குறித்து கவலை

0
Ivory Agency Sri Lanka

அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட இருபதாம் திருத்தத்தின் உள்ளடக்கங்களால் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதோடு, சில சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இவை அனைத்திற்குள்ளும் மிக முக்கியமான பிரச்சினையாக காணப்படுவது தகவல் உரிமை, ஊழல் விசாரணை, பொது நிதிகளை கண்காணித்தல் மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்பு என்பனவே முக்கியமான விடயங்களாக காணப்படுவதாக, டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமையின் தூய்மை அரசியலமைப்பில் அப்படியே இருக்கும்போது, முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தத்தின் விதிகள் தகவல் சுதந்திரச் சட்டத்தின் கட்டமைப்பைக் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஊடாக பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வலியுறுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமை

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் நியமனம் அரசியல் அமைப்புச் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டுமென தகவல் அறியும் சட்டமே குறிப்பிடுகின்றது. மேலும் இந்த 20ஆவது திருத்தம் அரசியல் அமைப்புச் சபையை அதற்கான வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இரத்து செய்கிறது, இதனால் தகவல் அறியும் சட்டத்தின் செயல்திறன் பாதிக்கப்படும். இதனால் வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, முன்மொழியப்பட்ட நாடாளுமன்ற பேரவையால் அத்தகைய பரிந்துரைகளை முன்வைக்க முடியாது என அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி, அசோக ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் செயற்பாடு, கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 2017 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் நாடு முழுவதும் உள்ள சமூகம் மற்றும் தனிநபர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதன் நேர்மறையான தாக்கத்திற்கு முதல் சாட்சியாக இருந்து வருகிறது, மேலும் தகவல் அறியும் பிரஜைகளின் அடிப்படை உரிமையைத் தொடர ஊக்குவிக்கும் அதேவேளையில், தகவல் அறியும் ஆணைக்குழுவின் செயல்பாட்டை மறைமுகமாகவேனும் து குறைமதிப்பிற்கு உட்படுத்துவது தகவல் அறியும் உரிமையை கடுமையாக பாதிக்கும் என அசோகா ஒபேசேகர எச்சரித்துள்ளார்.

ஊழல் விசாரணைகள்

உத்தேச 20 ஆவது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பின் 156 ஏ பிரிவை இரத்து செய்வது குறித்தும் டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் கவலை கொண்டுள்ளது.

“இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் சட்டரீதியான அங்கீகாரத்தை பலவீனப்படுத்துவதோடு, 156 ஏ பிரிவை இரத்து செய்வதானது, 19ஆவது திருத்தத்தின் மூலம் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட சுயமாக விசாரணைகளை ஆரம்பிக்கும் அதிகாரத்தையும் இரத்து செய்யும்.”

முறைப்பாட்டை பெறுவதற்கு முன்னர் ஆரம்கட்ட விசாரணையை மேற்கொள்ளும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரத்தை நீக்குவது ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து பொதுமக்களுக்கு எதிர்மறையான செய்தியை கொடுக்கும் என அசோகா ஒபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது நிதி மேற்பார்வை

அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அரசின் செலவுகள் குறித்து ஆராயும் தேசிய கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்முதல் ஆணைக்குழு என்பது இரத்துச் செய்யப்படுவதாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

“அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தம், தேசிய கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு தொடர்பான விடயங்களை நீக்குவதன் மூலம் தேசிய கணக்காய்வுச் சட்டத்தை காலாவதியான ஒன்றாக மாற்றும். அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தும் அரச அதிகாரிகளிடமிருந்து அதனை அறவிடும் திறன் போன்ற குறிப்பிடத்தக்க அதிகாரங்களைக் தேசிய கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு கொண்டுள்ளது. கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவை இரத்து செய்வதன் ஊடாக இந்த அத்தியாவசிய அதிகாரம் இல்லாது செய்யப்படும்”

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் நடைமுறைகள், முழுமையாக செயல்படவில்லை என்றாலும், வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய கொள்முதல் கட்டமைப்பை உறுதிப்படுத்த இதுபோன்ற ஒரு நிறுவனத்தின் இருப்பு முக்கியமானது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பொது கொள்முதல் என்பது ஊழல் ஆபத்து அதிகமுள்ள ஒரு பகுதியென அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி அசோகா ஒபீசேகர மேலும் சுட்டிக்காட்டுவது,

ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் தனது கொள்கை அறிக்கையில் ஜனாதிபதியின் உறுதிப்பாட்டை ஏற்றுக்கொண்ட அதேவேளையில், அந்த உறுதிப்பாட்டை அடைய ஒரு சுயாதீன கொள்முதல் ஆணைக்குழுவின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள்

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவை பாதிக்கும் அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20வது திருத்தத்தில் உள்ள விதிகள், தேர்தல் காலத்தில் பொது சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் அல்லது நடவடிக்கை எடுக்கும் ஆணைக்குழுவிள் திறனைக் குறைக்கும் டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

20ஆவது திருத்தம் இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவால், வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் வரம்பை “பொது சேவை தொடர்பான எந்தவொரு விடயத்திலும்” உத்தரவு பிறப்பிப்பதைத் தடுப்பதன் மூலம் கட்டுப்படுத்துகிறது எனவும் இந்த வரையறுக்கப்பட்ட பொறுப்புக்கூறல் எதிர்கால தேர்தல்களின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் அசோகா ஒபேசேகர கூறுகிறார்.

தற்போது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகள் அதன் தற்போதைய வடிவத்தில் முன்மொழியப்பட்ட 20ஆவது திருத்தத்தால் கடுமையாக பலவீனமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

”அரசியல் அமைப்புச் சபையை ஒழித்து பலவீனமான நாடாளுமன்ற பேரவையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக, அரசியல் அமைப்புச் சபை மற்றும் நீதித்துறையின் அதிகாரங்களை பலவீனப்படுத்தி அவற்றை நிறைவேற்று அதிகாரத்திற்கு வழங்கியுள்ளது”

அரசியலமைப்பு சீர்திருத்திற்கான தேர்தல் ஊடாக வழங்கப்பட்ட மக்கள் விருப்பத்தை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, ஊழலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கு எதிரான இந்த சிவப்பு எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Facebook Comments