பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுகின்றமைக்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு

0
Ivory Agency Sri Lanka

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் அண்மையில் பொதுச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு இராணுவ பயிற்சி வழங்கப்படுவதற்கு, நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்களில் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

பட்டதாரிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதானது பொது சேவையை தவறான கலாச்சாரத்திற்கு வழிநடத்துவதாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படைத் தலைமையகம், ரெஜிமென்ட் மையங்கள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகள் உட்பட நாடு முழுவதும் 51 இராணுவ பயிற்சி நிரலையங்களில் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக ஸ்ரீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் “செழிப்பான நோக்கு” தேர்தல் அறிக்கைக்கு ஏற்பவும், அவரது அறிவுறுத்தல்களுக்கு அமையவும், பாதுகாப்புப் படைத் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில் செப்டம்பர் 14ஆம் திகதி பயிற்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருந்தது.

அரசாங்கத்தின் தீர்மானமானது தற்போது அரச சேவையில் உள்ள ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே மன அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்தும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மூலம் “எல்லாவற்றையும் இராணுவத்தால் மாத்திரமே செய்ய முடியும்” என்ற கருத்தை அறிமுகப்படுத்துவது தற்போது பொது சேவையில் பணியாற்றி வரும் இராணுவத்தைத் தவிர ஏனைய அனைத்து அரசு ஊழியர்களையும் சோர்வடையச் செய்யுமென ஆசிரியர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

சிவில் நிர்வாகத்திற்காக இராணுவ வீரர்களை நியமிப்பதன் மூலமும், கடந்த காலத்தில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணிகளாலும் இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்கனவே நாட்டில் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுச் சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 50,000 பட்டதாரிகள் சிவில் சேவையில் இணைய உள்ளதாகவும், அவர்களுக்கு இராணுவ பயிற்சியை வழங்குவதன் ஊடாக, நாட்டு மக்களுக்கு சிவில் சேவை மீது காணப்படும் நம்பிக்கை இல்லாமல் போகுமெனவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

இலங்கையில் சிவில் நிர்வாகத் துறையில் ஏராளமான திறமையான, படித்த, புத்திசாலி மற்றும் கடின உழைப்பாளிகள் இருப்பதாகவும், இதில் இராணுவம் தலையீடு செய்வதால் எதிர்காலத்தில் சிவில் சேவையின் தரம் வீழ்ச்சியடையும் எனவும் தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆசிரியர் சங்கத் தலைவர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐந்து நிலைகளின் கீழ்

இந்த பயிற்சிகள் ஐந்து கட்டங்களின் கீழ் இடம்பெறுவதுடன் ஒரு மாதத்திற்கு 10,000 பட்டதாரிகள் வரைக்கும் 50,000 பட்டதாரிகளுக்கு ஐந்து மாத காலத்திற்கு இந்த பயிற்சிகளை மேற்கொள்ளுவார்கள்

பயிற்சியளிக்கப்பட்ட, முழுமையான மற்றும் ஆற்றல்மிக்க தொழிலாளர் தொகுப்பாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களின் திறமையான பங்களிப்பை உறுதி செய்வதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்காக, பட்டதாரி நோக்குநிலை திட்டம் இராணுவ பயிற்சி பணிப்பகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

“இந்த திட்டம் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இது இராணுவ தலைமையகத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.”

‘தலைமைத்துவம் மற்றும் குழு கட்டமைத்தல் பயிற்சி’, ‘மேலாண்மை பயிற்சி’, ‘தனியார் மற்றும் மாநிலத் துறை நிறுவனங்களில் பயிற்சி’, ‘திட்டப்பணி மற்றும் கள ஆய்வுகள் ‘,’ ஒத்திசைவு மற்றும் பின்னடைவு ‘போன்றவை திறமையான உற்பத்தித் துறையைத் தணிக்கும் போது திறமையான பொதுத்துறை ஊழியரை வளர்ப்பதே இதன் நோக்கமென இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதனை கவனத்திற்கொள்ளாது, முன்னைய ராஜபக்ச ஆட்சியின்போது, தலைமைத்துபப் பயிற்சி என்ற பெயரில் அழைக்கப்பட்ட பயிற்சியின் போது, பல்கலைக்கழகம் மாணவர் ஒருவரும் அதிபர் ஒருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments