மஹர உடல்கள் தகனத்திற்கு எதிராக நீதிமன்றில் மனு

0
Ivory Agency Sri Lanka

மஹர சிறைச்சாலையில் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலை அடுத்து,கைதிகள் நடத்திய போராட்டங்களை அடக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 பேரின் உடல்களை எரியூட்டுவதற்கான ஏற்பாட்டிற்கு, எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரண்டு நாட்களுக்குள் விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டத்தரணி சேனக பெரேரா, வெலிசர நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை (02)) ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதானது உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கிடைக்காமல் போகும் என்பபதோடு அவர்களுக்கு அநீதிக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சரியான தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு சட்டத்தரணி சேனக பெரேரா வெலிசர நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹர சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 11 பேர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்துமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சடலங்கள் தகனம் செய்யப்பட்டிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியருந்தன.

கொரோனா தொற்றுநோயால் உயிரிழந்தவர்களிக் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என்ற மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், நீதவான் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பிரதிநிதியும் சுகாதார அதிகாரியும் நீதிமன்றில் முன்னிலையாகுவார்கள் என நீதவான் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

சேனக பெரேரா தாக்கல் இந்த மனு மீதான விசாரணையில், நாமல் ராஜபக்ச முன்னிலையாகவுள்ளார்.

கொரோனா நோயால் இறப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தாலும், மஹர சிறைச்சாலையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது குற்றவியல் நீதியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“பதினொறு பேரில் ஒன்பது பேருக்கு” கொரோனா

மஹர சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்ட 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் பேராட்டம் நடத்தியபோதிலும், இறந்த கைதிகளை அடையாளம் காண முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களின் உடல்கள் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் அடையாள ஆவணங்கள் தீவிபத்தால் அழிவடைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பது கடினமென ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் நபர்களின் சடலங்களை கட்டாயம் தகனம் செய்ய வேண்டும் என வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மனுக்களையும் தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், கொரோனா தொற்றிய நிலையில் மரணித்தவர்களின் சடலங்களை, அவர்களது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்கள் பொறுப்பேற்காவிடின், அவற்றை அரசாங்க செலவில் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குறித்த இராஜாங்க அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டதற்கு மறுதினம், டிசம்பர் முதலாம் திகதி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவின் கையெழுத்துடன் வெளியான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மஹர சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 11 பேர் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்துமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சடலங்களை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சி மஹரவிற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை காலை மஹர சிறைச்சாலைக்குச் சென்றிருந்ததோடு, அங்கு ஏற்பட்டிருந்த அசம்பாவிதம் குறித்து விசாரித்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மஹர சிறைக்குச் சென்ற விடயம் குறித்த நேரடி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

நலின் பண்டார, திலீப் வெதஆரச்சி, ரோஹிணி கவிரத்ன, ஹர்ஷன ராஜகருணா, ஜே.சி. அலவத்துவல, முஜிபுர் ரஹ்மான், ஹெக்டர் அப்புஹாமி, ரோஹன பண்டாரா ஆகியோர் மஹர சிறைக்குச் சென்றிருந்தனர்.

Facebook Comments