புலனாய்வுத் துறை விசாரணைகளால் அரச சார்பற்ற நிறுவனங்கள் அச்சம் (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

அரச புலனாய்வு அதிகாரிகள் அரச சார்பற்ற தொண்டு நிறுவன ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படையாகவே சேகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர்கள் தமது உயிர் அச்சுறுத்தல் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.

“அப்படியானால் எங்களுடைய பாதுகாப்பு எங்கே? அந்த பாதுகாப்பை நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்வது? இதுபோன்ற பல வியங்கள் எம் மனதில் உள்ளன.” என மனித அபிவிருத்திக்கான புரட்சிகர இருப்பு (RED) அமைப்பின் சந்திர தேவநாராயண, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) கொழும்பில் இடம்பெற்ற, மக்கள் சக்தி அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழு ஒன்று தனது அலுவலகத்திற்கு தமது தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுள்ளதாக, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக தொடர்பில் செயற்பட்டு வரும், சந்திர தேவநாராயண ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

“இந்த நபர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எங்கிருந்து உதவி பெறுகிறார்கள், அவர்கள் யாருடன் பணிபுரிகிறார்கள் என்பது பற்றிய அனைத்து தகவல்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் தமது வீட்டிற்கு சென்று தகவல்களை பெற்றுக்கொண்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டிய தேவநாராயண, அவர்கள் எந்த சட்டத்தின் கீழ் தமது வீட்டிற்கு வந்து தனிப்பட்ட தகவல்களை சேகரித்தனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அவர்களுக்கு எனது பிறப்பிலிருந்து இப்போது வரை தகவல்களைப் பெற வேண்டிய நோக்கம் இருந்துள்ளது. இறந்த பெற்றோர்களைப் பற்றிய தகவல்கள், இறந்த உடன்பிறப்புகள் பற்றிய தகவல்கள், கிராமத்தில் உள்ள உறவினர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அவர்களுக்கு அவசியமாக இருந்துள்ளது.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவிற்கு அமைய, இந்த தகவலை சேகரிப்பதாக பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையின் போது தன்னிடம் கூறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு வந்து உயிராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அச்சுறுத்தல் விடுப்பதன் ஊடாக தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை வன்மையாக கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகளில் பிள்ளைகளை அச்சுறுத்துவதன் ஊடாக தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது ஒரு பெரிய அடக்குமுறை திட்டத்திற்கு முன்னோடியாகும் என ஊடகவியலாளர் சந்திப்பின் போது சந்திர தேவநாராயண எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுவினரால் கிறிஸ்தவ மதத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த இரகசிய அறிக்கை குறித்த தகவல்களை வழங்குமாறு சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரொஹான் சில்வாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு இன்று கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments