குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான வர்த்தகருக்கு பிணை (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

பணத்திற்காக குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான சந்தேக நபர் 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் இரண்டு மற்றும் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 4ம் திகதி சந்தேகநபரை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என மொறட்டுவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான அல்லது, வேறு நிலைமைகள் காரணமாக குழந்தை கருவில் இருக்கும் போதே தாய்மாருடன் ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்து, அக்குழந்தைகள் பிறந்ததும் மூன்றாம் தரப்பினருக்கு இந்த நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சி.எஸ்.சி நேஷன் லங்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் பணிப்பாளருமான மஞ்சுள லசந்த உக்வத்த என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மொரட்டுவை , ஹல்தமுல்ல, சி.பி.டி சில்வா மாவத்தை மற்றும் தஹம் மாவத்தை ஆகிய பிரதேசங்களில் இயங்கிய நிலையங்களே இவ்வாறு சுற்றி வலைக்கப்பட்டதோடு, அந்த இரண்டு இடங்களில் கர்ப்பிணித் தாய்மார்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த இரண்டு இடங்களில், இந்த கர்ப்பிணித் தாய்மார்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவதன் ஊடாக, குழந்தைகளை குறிப்பிட்ட தொகைக்கு இந்த நபர் ஊடாக விற்பனை செய்கின்றனர்”

மனிதக் கடத்தல் என்பது தண்டனைச் சட்டக் கோவை பிரிவு 360இன் கீழ் ஒரு குற்றமாகும், மேலும் இது ஒரு மனிதனுக்கு முந்தைய கருவுற்ற பின்னர், ஒரு நபரை பணத்திற்கு விற்க முயற்சிப்பது மனித கடத்தலின் ஒரு பகுதியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட விசாரணையின் முடிவு

சிறுவர் மற்றும் மகளிர் பணியக பணிப்பபாளர் உட்பட ஒரு குழு நடத்திய நீண்ட விசாரணையின் விளைவாக, தமது குழந்தைகளை பணத்திற்கு விற்பனை செய்வதற்கு உறுதியளித்த 12 கர்ப்பிணி பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, இவர்களில், ஐந்து பெண்களின் குழந்தைகள் ஏற்கனவே மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

“அதேபோல் மூன்று குழந்தைகளுடன் தாய்மார்களும் இருந்தனர். மேலும் அந்த இடத்தில் மேலும் 12 கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர்”

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சந்தேகநபர் டிசம்பர் 21 ஆம் திகதி இரவு மாத்தளையில் வைத்து கைது செய்யப்பட்டதாக அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்திற்கு அமைய, ஒரு குழந்தையை வேறொருவருக்குக் கொடுக்கும் சட்ட முறையையும் பொலிஸ் ஊடகப் பேச்சானர் விளக்குகின்றார். “நம் நாட்டின் சட்டத்தின்படி, ஒரு குழந்தையை வேறொரு நபருக்குக் கொடுத்தால், அது தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, மாவட்ட நீதிமன்றம் மூலம் செய்யப்பட வேண்டும்.”

சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம்

கருக்கலைப்பை எதிர்கொள்ளும் பெண்களை பாதுகாத்து, பிள்ளைகள் பிறந்த பின்னர் தத்தெடுப்பவர்களுக்கு குழந்தைகளை வழங்கும் சி.எஸ.சி நேஷன் லங்கா நிறுவனம் தொடர்பில் சமூக ஊடகங்களில், சந்தேகநபர் விளம்பரப்படுத்தினார்.

இந்த நிறுவனம் குழந்தைகளை விற்பனை செய்யும் ‘பேபி பார்ம்’ என்ற குற்றச்சாட்டை சந்தேநபர் முன்னதாக நிராகரித்திருந்ததோடுடு, இது ஒரு “தொண்டு செயல்” எனக் கூறினார்.

“உதவியற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும்” ஒரு அமைப்பு என பேஸ்புக்கில் பணம் செலுத்தி மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டம் என்ன கூறுகிறது?

தத்தெடுப்பு சட்டம் என அழைக்கப்படும் 1941ஆம் ஆண்டின் தத்தெடுப்பு கட்டளை எண் 24 இன் கீழ் தத்தெடுப்பு தேவைகள் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

தத்தெடுக்க வேண்டிய குழந்தை 14 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தையைத் தத்தெடுக்கும் போது, நீதிமன்றம் குழந்தையின் ஒப்புதலைப் பெறும்.

தத்தெடுக்கும் தரப்பு அதாவது தம்பதியர் அல்லது தனிநபர் 25 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தத்தெடுக்கும் தரப்பிற்கும் குழந்தைக்கும் வயது வித்தியாசம் 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இருப்பினும், குழந்தை விண்ணப்பதாரரின் நேரடி வம்சாவளியாகவோ அல்லது விண்ணப்பதாரரின் முழு அல்லது அரை சகோதரர் அல்லது சகோதரியாகவோ அல்லது அவர்களிடமிருந்து வந்தவர்களாகவோ அல்லது விண்ணப்பதாரரின் மனைவியின் மற்றொரு திருமணத்தின் குழந்தையாகவோ இருக்கும்போது 21 வயது வயது இடைவெளி கட்டாயமில்லை.

ஒரு பெண்ணைத் தத்தெடுக்க விண்ணப்பிப்பவர் ஒரு ஆணாக இருந்தால், அவரை நீதிமன்றம் அனுமதிக்காது. இருப்பினும், நீதிமன்றம் விரும்பினால் விசேட உறவினர்களுக்கு அனுமதி வழங்க முடியும்.

ஒரு தம்பதியினரால் கோரப்படும்போது, குழந்தையைத் தத்தெடுக்க இரு தரப்பினரின் ஒப்புதல் தேவை. ஆனால், அவர்கள் விவாகரத்து செய்தால் அல்லது கட்சிகளில் ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது வாழ்க்கைத் துணை மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், இரு தரப்பினரின் சம்மதமும் தேவையில்லை.

ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது, அவரது / அவள் இயல்பான பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாகும். குழந்தையின் பெற்றோர் திருமணமானால் இரு பெற்றோரின் சம்மதமும், குழந்தை திருமணமாகாதவராக இருந்தால் (தந்தை பெயரிடப்படாவிட்டால்) தாயின் சம்மதமும் தேவைப்படுகிறது, மேலும் குழந்தை ஒரு பாதுகாவலரின் கீழ் இருக்கும்போது பாதுகாவலரின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

இருப்பினும், ஒப்புதல் பெறும் நபர் குழந்தையை கைவிட்டுவிட்டால் அல்லது குழந்தையை பராமரிக்க புறக்கணித்திருந்தால் அல்லது உணர்விழந்து இருந்தால், அவரது / அவள் ஒப்புதல் தேவையில்லை மற்றும் மாவட்ட நீதிமன்றம் குழந்தை குறித்து ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும். ஏனென்றால், குழந்தைகளின் மிக உயர்ந்த பாதுகாவலராக மாவட்ட நீதிமன்றம் கருதப்படுகின்றது.

தத்தெடுப்பு தொடர்பாக குழந்தையின் இயற்கையான பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு பணம் அல்லது அன்பளிப்புகளை வழங்குவது குறித்த எந்தவொரு உறுதிமொழியும் வழங்கப்படக்கூடாது.

தத்தெடுத்த பெற்றோர் தத்தெடுத்த பின்னர் குழந்தைக்கு ஒரு பெயரை பரிந்துரைக்கலாம், மேலும் குழந்தைக்கு தத்தெடுக்கப்பட்ட தந்தையின் குடும்பப் பெயரையும் வைக்கலாம்.

Facebook Comments