வெலிசிறைச்சாலையில் மீண்டும் ஒரு ‘இரத்த களரி’ ஏற்படுமோ என அச்சம்

0
Ivory Agency Sri Lanka

தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய கைதிகள் குழுவினை அடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி, ஒரு மாத காலத்திற்கும் மேலாக மரண தண்டனையை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வார இறுதியில் கலகத் தடுப்பு காவல்துறைக்கு மேலதிகமாக சுமார் 200 மேலதிக சிறைக்காவலர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உண்மைகளை விளக்கி, தாக்குதல் எதுவுமின்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாறெனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் தரையிறங்கிய பின்னர் குடிக்க தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டும் சிறைக் கைதிகள் குறித்த ஆர்வலர்கள், அடக்குமுறை தீவிரமடையும் என்ற அச்சத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உடனடியாக இந்த விடயத்தில் தலையிடவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.

“சிறைக்குள் இருக்கும் கைதிகளிடமிருந்து எமக்குக் கிடைத்த தகவல்களுக்கு அமைய, வெலிக்கடை சிறைச்சாலையை மீண்டும் இரத்தக் ஆறாக மாற்ற அரசாங்கம் அதிகப்படியான வன்முறையைப் பிரயோகிக்குமா என்ற அச்சம் நிலவுகிறது.” என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

“இந்தச் சூழலில், கைதிகளின் உயிரைக் காப்பாற்றவும், போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிரான பழிவாங்கலைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என அதில் கூறப்பட்டுள்ளது.

”நீண்ட காலமாக, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வெறும் வாக்குறுதிகளுடன் மட்டுப்படுத்தாமல், காலவரையறையுடனான உங்கள் அமைப்புகளின் மேற்பார்வையின் கீழ் வெளிப்படையான திட்டத்தின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேராவின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் கடந்த வருடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Facebook Comments