அரசின் புதிய உரக் கொள்கையால் இறப்பர் உற்பத்தி ஆபத்தில் உள்ளது

0
Ivory Agency Sri Lanka

இலங்கை அரசாங்கம் விவசாயத்திற்கான இரசாயன இறக்குமதிக்கு தடை விதித்ததால் இந்த வருடம் இறப்பர் உற்பத்தி குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பூஞ்சைக் கொல்லிகள் இல்லாமல் இறப்பர் இலை நோய் வேகமாக பரவுவதும், இறப்பர் மரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உரம் இல்லாததும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக இறப்பர் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் 15 முதல் 20 சதவிகிதம் உற்பத்தி குறைவடைந்துள்ளதாலும், முதிர்ச்சியடையாத மரங்களுக்கு சேதம் ஏற்படுவதாலும், ஏலக்காய், மிளகு மற்றும் கறுவா போன்ற மாற்றுப் பயிர் உற்பத்தியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இறப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

“இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, 2018 இல் பெரிய மற்றும் சிறிய அளவிலான விவசாயிகளால் பயிரிடப்பட்ட 107,000 ஹெக்டேயர்களில், சுமார் 20,000 ஹெக்டேயர் பூச்சி மற்றும் பூஞ்சை இலை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது” என கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி சேமிப்பு மற்றும் தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விவசாயத்திற்கான இரசாயன இறக்குமதியை தடை செய்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றும், தொழிற்சங்கமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விவசாயத்தில் இரசாயனங்கள் இல்லாத காலத்தில் இலங்கையர்கள் 140 வருடங்கள் வாழ்ந்ததாகக் கூறியுள்ளது.

வணிக ரீதியான இறப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் தோட்ட நிறுவனங்கள், “பெஸ்டலோடியோப்சிஸ்“ பூஞ்சை பரவுவதைத் தடுக்கவும், இறப்பர் தோட்டங்களைப் பாதுகாக்கவும் போதுமான உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றன.

“அழிவு மற்றும் பரவல் விகிதத்தை கருத்தில் கொண்டு, இந்த இலை நோய் இறப்பர் தொழிலில் கொரோனா போன்றது. இலங்கையில் பல இறப்பர் வளரும் பகுதிகளில் நிலவும் ஈரமான வானிலை நோய் பரவுவதற்கு பங்களிப்பு செய்கிறது. இறப்பர் பால் உற்பத்திக்கு நல்ல இலைகளைக் கொண்ட மரங்கள் வளர வேண்டும் என்பது முக்கிய விடயம்.
பெஸ்டலோதியோப்சிஸ் பூஞ்சை இலை உதிர்வை ஏற்படுத்துகிறது, இதனால் உற்பத்தி கணிசமாக குறைகிறது. இந்த நோய் காணப்படும் ஏனைய இறப்பர் உற்பத்தி நாடுகளின் அனுபவத்துடன் ஒப்பிடும்போது நிலைமை இன்னும் மோசமானது.” என கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் மற்றும் புஸ்ஸல்லாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் இறப்பர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மனோஜ் உடுகம்பொல அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

”இறப்பர் உற்பத்திக்கு கார்பெண்டாசிம் மற்றும் ஹெக்ஸாகோனசோல் போன்ற பூஞ்சைக் கொல்லிகள் மற்றும் மர இலை வளர்ச்சிக்கு உரம் தேவைப்படுகிறது. உரத்திற்கு அரசாங்கம் தடை விதிப்பதற்கு முன்னர், சந்தையில் உரத்தின் விலை இருமடங்காக இருந்தது. உரத் தட்டுப்பாடும் காணப்பட்டது. எனினும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதத்திற்குள், தேவையான அளவு உரத்தை முதிர்ந்த மற்றும் முதிர்ச்சியடையாத இறப்பர் செடிகளுக்கு இட வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த வருடம் ஏப்ரல்-மே மாதத்தில், பெஸ்டலோடியோப்சிஸ் காரணமாக இறப்பர் உற்பத்தியில் ஏற்கனவே 10 முதல் 20 சதவிகிதம் குறைவடைந்துள்ளதை நாம் கண்டறிந்துள்ளோம்.” என கெளனிவெளி நிறுவனத்தின் இறப்பர் பணிப்பாளர் உதாரா பிரேமதிலக கூறியுள்ளார்.

”இறப்பர் உற்பத்தியில் சரிவு காரணமாக, வருமானம் கணிசமாகக் குறையும். ஏனெனில் தொழிலாளர் செலவுகள் உட்பட ஒரு பெரிய நிலையான செலவை நாங்கள் ஏற்க வேண்டும்.
எங்கள் இலாபம் குறைந்து வருவதால், தொழில் வேகமாக சீர்குலையும்.” என கெளனிவெளி நிறுவனத்தின் இறப்பர் பணிப்பாளர் உதாரா பிரேமதிலக கூறியுள்ளார்.

”வருட இறுதியில், உற்பத்தியில் 15% முதல் 20% வீழ்ச்சியைக் காணலாம். அடுத்த வருடத்திற்குள் இறப்பர் தொழில் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. முதிர்ச்சியடையாத தாவரங்களுக்கு நோய் பரவும் போது, அது அவற்றின் நீண்டகால வளர்ச்சியை கடுமையாக பாதிக்கிறது. இறப்பர் மரங்களின் ஆயுட்காலம் சுமார் 30 வருடங்கள் என்பதால் இது இறப்பர் உற்பத்தியில் நீண்ட கால சரிவாகும். குறைந்தபட்சம் நாம் இப்போது ஒன்றுபட்டு தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனின், தொழில் நிச்சயமாக வீழ்ச்சியடையும்.” என அவர் கூறியுள்ளார்.

புதிய உரக் கொள்கைக்கு மாறும்போது ஆரம்பத்தில் சிக்கல்கள் எழலாம் எனவும், எனினும் அதை மாற்றியமைக்கும்போது நிலைமை மேம்படும் எனவும், இராஜாங்க நிதியமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வார இறுதியில் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.

உற்பத்திற்கு முற்றிலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது திட்டமிடப்படாத தீர்மானம் என எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த இராஜாங்க அமைச்சர், இதுத் தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகி பத்து வருடங்கள் கடந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Facebook Comments