இலங்கையில் தாய்மார் இறப்பு விகிதத்தில் உயர்வு

0
Ivory Agency Sri Lanka

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் முதல் வருடத்தில், இலங்கையில் தாய்மார் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்தியர்கள் சங்கத்தின் புதிய தலைவரை நியமிப்பது குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய சுகாதார அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றிய அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாரச்சி, 2002ஆம் ஆண்டில் 194கா காணப்பட்ட தாய்மார் இறப்பு விகிதத்தை 2019ஆம் ஆண்டில் 92ஆக குறைக்க முடிந்துள்ளதாக, சுகாதாரத் தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தாய்மார் இறப்பு விகிதம் குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும், இலங்கையில் தாய் இறப்புகளின் எண்ணிக்கை கடந்த வருடம் 150ஆக உயர்வடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்த நிலைமையை மாற்றவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என அமைச்சர் கூறியுள்ளார்.

“இந்த நிலைமையைக் குறைத்து கர்ப்பிணிப் பெண்களை பாதுகாப்பது நமது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதிநவீன வைத்திய உபகரணங்கள் உள்ளிட்ட வைத்திய நிலையங்களை நிறுவுவதற்கும் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்தியத் துறையை விரிவுபடுத்துவதற்கும் இந்த வருடத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய 40 வருடங்களாக தாய்மார் இறப்புகளை கண்காணிப்பதில் நாடு தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரசவம் வரை கர்ப்பிணித் தாய்மார்களைப் பராமரிப்பதற்கான பிரிவு மகப்பேறியல் எனவும், பெண் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவு மகளிர் வைத்தியப் பிரிவு எனவுத் அழைக்கப்படுவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்தியத் துறை தாய் மற்றும் பெண்கள் பராமரிப்பில் மிக முக்கியமான துறையாக கருதப்படுகிறது.

வைத்தியர் பிரதீப் டி சில்வா இலங்கை மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் 35ஆவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு நாட்டின் சுகாதார அமைப்பின் தரத்தை அளவிடுவதற்கான ஒரு அளவுகோலாக தாய்வழி இறப்பு விகிதத்தை சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர், கர்ப்பம் ஒரு பெண்ணுக்கு இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும் எனவும், ஒரு வேதனையான அனுபவமாக இருக்கக்கூடாது எனவும், ஒரு பெண் அமைச்சராக தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments