நீண்ட காலமாக வருடாந்தம் நடத்தப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்ற உத்தரவுப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அனைத்து பிரதான சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மலையகத்தில் நடத்தப்படவிருந்த இந்த நிகழ்வு, இன ஒற்றுமைக்கு பாதகமாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
“கைதிகளின் கௌரவம் மற்றும் மனித நிலைமைகளுக்கான அவர்களின் உரிமைகளை உறுதி செய்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ், டிசம்பர் 11ஆம் திகதி உலக மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பதற்கு, நீதிமன்ற உத்தரவு ஊடாக காவல்துறை தடை வித்ததாக, கண்டி மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கண்டி மேலதிக நீதவான் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
”மன உளைச்சல், பொருளாதார பிரச்சினைகள், சமூக மற்றும் பிற சவால்களுக்கு மத்தியில் நியாயமான விசாரணை, சட்டத்தின் ஆட்சிக்காக பங்களிப்பு வழங்கிய 22 கைதிகளின் குடும்பங்களின் நீண்ட கால போராட்டத்தை பாராட்டுவதற்கு தயாராகவிருந்தோம்.” என கண்டி மனித உரிமைகள் நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை நந்தன மானதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு மற்றும் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை, கண்டி மனித உரிமைகள் நிலையம் காவல்துறைக்கு வழங்கியிருந்த இந்த நிகழ்வை பிற்காலத்தில் நடத்துமாறும், விடுதலைப் புலிகள் சந்தேகநபர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளின் குடும்பங்கள் இதில் பங்கேற்கக்கூடாது எனவும் கண்டி சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
பாராட்டைப் பெறும் குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு இன மற்றும் மத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, பாராட்டுக்கான தெரிவில், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சந்தேநபர்களா? குற்றம் சாட்டப்பட்டவர்களா? அல்லது தண்டனை விதிக்கப்பட்டவர்களா? என்பது போன்ற காரணங்கள் குறித்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாராட்டைப் பெறுபவர்கள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றத் தொடங்கினர், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நீதிமன்ற வழக்குகள் நிறைவடைந்த பின்னரும் எங்களுடன் இருந்தனர். அவர்கள் மனித உரிமைப் பாதுகாவலர்களாக மாறி, உயிர் பிழைத்த மற்றவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், ” என அருட்தந்தை நந்தன மானதுங்க கூறியுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட கைதிகள், அவர்களது குடும்பத்தினர், மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள், ஐ.நா ஊழியர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளை இந்நிகழ்வுக்கு அழைத்திருந்த போதிலும் காவல்துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.