“போர்க் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை“ தூதராக ஏற்க வேண்டாம்: கனடிய அரசுக்கு தமிழ் அமைப்பு வலியுறுத்தல்

0
Ivory Agency Sri Lanka

போர்க் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை தமது நாட்டுக்கான இலங்கைத் தூதராக ஏற்க வேண்டாம் என்று உள்ளூர் செயற்பாட்டுக் குழுவொன்று கனடியப் பிரதமரை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை விமானப் படையின் முன்னாள் தலைவர் எயர் சீப் மார்ஷல் சுமங்கல டயஸை “ஏற்புடையவர் அல்ல“ என்று அறிவித்து அவரது நியமனத்தை மறுக்க தமிழ் உரிமைகள் குழு கனடிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கடிதம் எழுதியுள்ளது.

போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்படும் எயர் சீப் மார்ஷல் சுமங்கல டயஸை கனடா அரசு “விரும்பத்தாக நபராக“ அறிவித்து தூதராக தமது நாட்டுக்கு வருவதற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று அந்தக் குழு கோரியுள்ளது.

எயர் மார்ஷல் டயஸ் போர்க் குற்றங்கள் இழைத்ததற்கான ஆதாரங்கள் ஆணித்தரமாக தம்மிடம் இருப்பதாக தமிழ் உரிமைக் குழு கூறுகிறது, அதுமட்டுமின்றி `காமன்வெல்த் கோட்பாடுகளை` மீறினார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

“கனடிய அரசு எயர் மார்ஷல் டயஸ் வருவதை விரும்பவில்லை, அவர் எமக்கு ஏற்புடையவரல்ல எனும் செய்தியை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்“ என்று அந்தக் குழு கோருகிறது. மேலும் அவர் மீது மேலதிகமாக விசாரணை ஒன்றைத் தொடங்க வேண்டும், எதிர்காலத்தில் அவர் மீது தடை விதிக்கும் நடவடிக்கை தேவையா என்பதை ஆராய வேண்டும் என்றும் அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இலங்கையின் இராணுவ மற்றும் கடற்படைத் தலைவர்கள் இப்படியான தர்மசங்கடத்திற்கு ஆளாகியிருந்தாலும், விமானப் படைத் தலைவர் ஒருவர் தூதராக நியமிக்கப்படுவதற்கு முதல் முறையாக இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளது.

இராஜாங்க உறவுகள் குறித்த வியன்னா தீர்மானத்தின்படி, எந்தவொரு நாடும் தமது நாட்டுக்கு தூதராக நியமிக்கப்படுபவரை எவ்விதக் காரணமும் கூறாமால் அந்த நபர் `விரும்பத்தகாதவர்` எனக் கூறி ஏற்க மறுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கையும் கனடாவும் அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கனடாவின் எதிர்ப்பை இலங்கை ஏற்காமல் எயர் மார்ஷல் டயஸ் கனடா வருவாராயின் அவர் மீது போர்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் வாய்ப்புள்ளது.

அவர் மீது தமிழ் உரிமைக் குழு பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. அவற்றுள் முக்கியமானது `செஞ்சோலைத் தாக்குதல்`. அத்தாக்குதலில் குறைந்தது 53 சிறுமிகள் கொல்லப்பட்டனர், 120க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அத்தாக்குதல் நடைபெற்ற போது அந்தப் பகுதிக்கு பொறுப்பான வான்படைத் தலைவராக அவர் இருந்தார். அந்த வளாகத்தில் சிறார்கள் இருந்திருப்பது அவருக்கு தெரிந்திருக்கலாம், இருந்தும் அடிப்படையில் சிவிலியன் இலக்கு ஒன்றின் மீது அளவுக்கு அதிகமான தாக்குதலை மேற்கொண்டார் என்று நம்புவதற்கு போதுமாக காரணங்கள் உள்ளன என்று கடந்த 2015ஆம் ஆண்டு ஐ நா மனித உரிமைகள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மேலும் இறுதிக்கட்டப் போரின் போது, போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 57,58 மற்றும் 59ஆம் படையணியனருக்கு மூத்த அதிகாரி எனும் வகையில் காத்திரமான வான் தாக்குதல் ஆதரவளித்தர் என்றும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இராணுவப் படையின் தலைவராக இருந்த ஜெனரல் ஜெகத் ஜயசூரிய பிரேசில் நாட்டுக்கு தூதராக நியமிக்கப்பட்ட போது, அவர் மீது பல மனித உரிமை அமைப்புகள் போர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அவரை நாட்டிலிருந்து வெளியேற்றவும் குரல் எழுப்பப்பட்டது. ஆனால் அது தொடர்பிலான முடிவு வருவதற்கு முன்னர் அவர் நாடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

Facebook Comments